வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன்: நடிகர் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!-வீடியோ.

ACTOR RAJNIKANTH 31.12.2017

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 6-வது நாளாக, நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து, போட்டோ எடுத்து வருகிறார். இன்றும் வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதி ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

முன்னதாக ரசிகர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ரசிகர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. ரசிகர்கள் கட்டுப்பாடுடன், அமைதியாக போட்டோ எடுத்து சென்றது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த கட்டுப்பாடு மட்டும் இருந்தால் நாம் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். நான் பில்டப் கொடுக்கவில்லை. தானாக பில்டப் கொடுக்கப்பட்டது.

எனக்கு அரசியலுக்கு வருவது பற்றிய பயம் இல்லை. மீடியாக்களை பார்த்து தான் பயம். பெரிய பெரியா ஜாம்பவான்களே மீடியாவை பார்த்து பயப்படுகிறார்கள். நான் ஒரு குழந்தை. எப்படி பயப்படாமல் இருக்க முடியும். நான் எதை பேசினாலும் அதை விவாதம் ஆக்கி விடுகிறார்கள். பத்திரிகையாளர் சோ இருந்திருந்தால் எனக்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கும். 

நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன். காலம் குறைவாக உள்ளதால் அதற்கு முன் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை. லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து அப்போது முடிவு செய்யலாம்.

பேருக்கோ, புகழுக்கோ ஆசைப்பட்டு நான் அரசியலுக்கு வரவில்லை. அதை நான் நினைத்து கூட பார்க்காத அளவிற்கு பல மடங்கு நீங்கள் ஏற்கனவே எனக்கு கொடுத்து விட்டீர்கள். பதவிக்கும் நான் ஆசைப்படவில்லை. அப்படி நான் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் 1994 -லேயே என்னை தேடி வந்தது. அப்போது வரதா பதவி ஆசை, 68 வயதில் எனக்கு வருமா? அப்படி ஆசைப்பட்டால் நான் பைத்தியக்காரன். நான் ஆன்மிகவாதி என சொல்லிக் கொள்ள தகுதி இல்லாதவன்.

அரசியல் மிகவும் கெட்டு விட்டது. ஜனநாயகம் சீர்கெட்டுபோய் உள்ளது. கடந்த ஓராண்டில் தமிழகத்தில் நடந்த சில அரசியல் நிகழ்வுகள், சம்பவங்கள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் தலைகுனிய வைத்து விட்டது. எல்லா மாநில மக்களும் நம்மை பார்த்து சிரிக்கிறார்கள். இப்போது நான் என்னை வாழ வைத்த தெய்வங்களான மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வருகிறேன். இப்போதும் நான் வரவில்லை என்றால் என்னை வாழ வைத்த மக்களுக்கு நல்லது செய்யவில்லை என்ற குற்றஉணர்வு நான் சாகும் வரை எனக்குள் இருந்து கொண்டே இருக்கும்.

அனைத்தையும் மாற்ற வேண்டும், அரசியல் மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டது. சிஸ்டத்தை மாற்ற வேண்டும். உண்மையான, வெளிப்படையான, நேர்மையான, ஆன்மீக அரசியல் கொண்டு வர வேண்டும் என்பதே எனது நோக்கம். விருப்பம். தமிழக மக்கள் அனைவரும் அதற்கு என் கூட இருக்க வேண்டும். அரசியல் கட்சி துவங்கி, தேர்தலில் போட்டியிடுவது சாதாரண விஷயம் இல்லை. நடுக்கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்றது. கடவுள் அருள், மக்களின் நம்பிக்கை, அபிமானம், ஆதரவு, அன்பு இருந்தால் சாதிக்க முடியும். அது கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அரசர்கள் அடுத்த நாட்டின் கஜானாவை கொள்ளை அடித்தார்கள். இப்போது ஜனநாயத்தின் பெயரால் ஆட்சிக்கு வருபவர்கள் சொந்த நாட்டையே கொள்ளையடிக்கிறார்கள். சிஸ்டத்தை மாற்றனும். எனக்கு தொண்டர்கள் வேணாம். காவலர்கள் வேணும். அவர்களின் உழைப்பால் ஆட்சி அமைந்தால் அரசிடம் இருந்து மக்களுக்கு சேர வேண்டிய திட்டங்களை, சலுகைகள் சேர செய்யும் காவலர்கள். யார் தப்பு செய்தாலும் தட்டிக் கேட்டும் காவலர்கள் வேணும். அவர்களை கண்காணிக்கும் பிரஜையின் கண்காணிப்பாளர்தான் நான். 

பதிவு செய்யப்படாத மன்றங்களை ஒருங்கிணைக்கனும். ஒவ்வொரு பகுதியிலும் நமது மன்றம் இருக்கனும். கட்டுப்பாடு, ஒழுக்கம் தேவை. தயாராகும் வரை நான் உட்பட யாரும் அரசியல் பற்றி பேச வேண்டாம். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். அறிக்கை விடவும், போராட்டம் பண்ணவும் நிறைய பேர் உள்ளனர். மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் பெறுவோம். பிறகு நாம் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என கூறிவோம். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் 3 ஆண்டுகளில் நாமே பதவியை ராஜினாமா செய்துவிட்டு போவோம்.

உண்மை, உழைப்பு, உயர்வு தான் எனது மந்திரம். நல்லதே நினைப்போம், நல்லதையே பேசுவோம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் என்பது தான் எனது கொள்கை. ஜனநாயக போரில் நம்ம படையும் இனி இருக்கும். இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் இன்று பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று முதன் முதலில் உறுதிப்படுத்தியதே நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகம்தான்!-இதோ அதற்கான ஆதாரம்.

http://www.ullatchithagaval.com/?p=28624

தை மாதத்தில் முக்கிய அறிவிப்புகளை நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுவார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com