100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்தகோரி ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக (100 நாள்) வேலை உறுதியளிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்தகோரி, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் பொது மக்கள் சார்பில், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மத்திய அரசு நிதி உதவியுடன் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் நாடு முழுவதும் கிராமபுறங்களில் செயல்படுத்தபட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஏழை, எளிய பொது மக்கள் ஏரி, குளம், வாய்க்கால் தூர்வாருதல் உள்ளிட்ட உள்ளுர்  பணிகளை செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன்பு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ஏழை, எளிய மக்கள் போதிய வருவாய் இன்றி பெறும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

அதனால் அந்த திட்டத்தை தமிழ்நாட்டில் மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி, அரசியல் கட்சிகள் குரல் கொடுத்தும் எந்த வித பயனுமில்லை. இந்நிலையில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்து அதிகாரிகளிடம் மனுகொடுப்பதுடன் அவர்கள் வேலை வழங்குவது தொடர்பாக உறுதியளிக்கும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்து இன்று போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக திருவெறும்பூர் ஒன்றியத்தில் நடந்த போராட்டத்திற்கு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நடராஜன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த போராட்டத்தில் திருவெறும்பூர் பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு மீண்டும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு  உறுதியளிப்பு திட்டம் படி வேலை வழங்க வலியுறுத்தி, திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஷ்வரியிடம் கோரிக்கை மனுவை அளித்ததோடு, அந்த கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்கும் வரை அலுவலக வாயில் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டதோடு, சமைப்பதற்கு சமையல் பாத்திரத்துடன் வந்ததால் பரப்ரப்பு ஏற்பட்டது.

பொது மக்களிடமிருந்து மனுவை பெற்று கொண்ட உமா மகேஷ்வரி, சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply