தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்காக 3.9.2013 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்திலுள்ள பொது மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுவதோடு, 17,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.