வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியமாட்டேன் : மகிந்த ராஜபக்ச கொக்கரிப்பு!

rajapakse-lவெளிநாட்டு அழுத்தங்களுக்கோ, உள்நாட்டு சதிகளுக்கோ தாம் அடிபணியப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீண்டும் சூளுரைத்துள்ளார்.

குருநாகலில் நேற்று நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 62 வது ஆண்டுவிழாவில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“வெளிநாட்டு அழுத்தங்களுக்கோ, உள்நாட்டு சதிகளுக்கோ சிறிலங்கா அரசாங்கம் அடிபணியாது. ஜனநாயகத்தை காக்கவும், வெளிநாட்டு அழுத்தங்களை முறியடிக்கவும் அனைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும்.

ஜனநாயகத்துக்கு எதிரான பாதையிலோ, எதேச்சாதிக்காரப் பாதையிலோ செல்லும் நோக்கம் எனக்கோ, எனது அரசாங்கத்துக்கோ இல்லை. சிறிலங்காவைப் போன்று ஆசியாவில் வேறெந்த நாட்டிலும் இந்தளவுக்கு தேர்தல்கள் நடக்கவில்லை.

2005-ல் ஆட்சிக்கு வந்த பின்னர், எனது அரசாங்கம் 11 தேர்தல்களை நடத்தியுள்ளது. விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துள்ளது. இதைவிட வேறென்ன ஜனநாயகம் உள்ளது?

சர்வாதிகாரிகள் எவரும் தேர்தல்களை நடத்துவதில்லை, தமது விருப்பங்களுக்கேற்பவே செயலாற்றுவார். சிலர் என்னை எப்படியாவது ஆட்சியில் இருந்து அகற்ற முனைகின்றனர்.

அது நடந்தாலும், மக்களை சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து அகற்ற முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply