இளம்பெண் பாலியல் பலாத்காரம்!-பாஜக சட்டமன்ற உறுப்பினரை உடனடியாக கைது செய்ய அலகபாத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

குல்தீப் சிங் செங்கார், உத்தரபிரதேச மாநிலம், பங்கர்மாவ் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர்

உத்தரபிரதேசத்தில் பலாத்கார புகாருக்கு ஆளான பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்காரை. உடனடியாக கைது செய்யுமாறு அலகபாத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர் அனில் சிங் ஆகியோர், தன்னை பலாத்காரம் செய்ததாக 17 வயது இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனால் பெண்ணின் தந்தை பப்புவை, குல்தீப் சிங்கும், அனில் சிங்கும் தாக்கியதோடு, அவரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்பு, கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர் அனில் சிங் ஆகியோரை கைது செய்யக் கோரி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன.

இந்நிலையில், பலாத்கார வழக்கு தொடர்பாக, பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் சகோதரர் அனில் சிங்கை போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் மீதும், போலீஸார்  வழக்கு பதிவு செய்தனர். பெண் அளித்த பலாத்கார புகார், அவரது தந்தை மர்ம மரணம் தொடர்பான வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குல்தீப் சிங்கை, சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கோபால் ஸ்வரூப் சதுர்வேதி, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு விவரமாக கடிதம் எழுதியிருந்தார்.

அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.பி. போஸ்லே.

இதையடுத்து, இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி டி.பி.போஸ்லே, நீதிபதி சுனீத் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுனீத் குமார்.

மேலும், இதுதொடர்பான விவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு  உத்தரவு பிறப்பித்தது.

அப்போது உத்தரப் பிரதேச அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குல்தீ்ப் சிங்கை சிபிஐ அதிகாரிகள் அழைத்து சென்று விசாரித்து வருவதாகவும், ஆனால், அவர் கைது செய்யப்படவில்லை எனவும் கூறினார்.

இதை தொடர்ந்து குல்தீப் சிங்கை இன்னமும் ஏன் கைது செய்யவில்லை? என கேள்வி கேட்ட நீதிபதிகள், அவரை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களையும் நிராகரிக்குமாறு, உத்தரப் பிரதேச போலீஸாருக்கும், சிபிஐக்கும் உத்தரவு பிறப்பித்தனர். இந்த வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மே 2-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டனர்.

அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

குல்தீப் சிங் செங்கார், உத்தரபிரதேச மாநிலம், பங்கர்மாவ் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர்.

 யார் இந்த குல்தீப் சிங் செங்கார்?- இதோ நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply