மின் திட்டங்களுக்கு ரூ.1500 கோடி வழங்க வேண்டும்: பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

tn-cmfதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–

புதுப்பிக்க தக்க மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதை நீங்கள் அறிவீர்கள்.

காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தில் மட்டும் 7,145 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த ஆண்டில் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை இந்த துறைகளில் உற்பத்தி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

சூரிய மின் சக்தி திட்டத்தின் மூலம் அடுத்த 3 ஆண்டில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.

காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொண்டு செல்வதற்கு அடிப்படை கட்டுமான வசதிகளை உருவாக்குவதில் பல பின்னடைவுகள் உள்ளன. காற்றாலை மின்சாரம் அவ்வப்போது கிடைக்கும் காற்று, இயற்கை மாற்றங்களை பொறுத்தது. உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வெளியே கொண்டு செல்வதற்கு அதிக செலவாகிறது. காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து இதை கொண்டு செல்வதற்கு அனல் மின்நிலையத்திற்கு ஆகும் செலவை விட 5 மடங்கு அதிகம் செலவாகிறது.

அதே நேரத்தில் காற்றாலை மூலம் செய்யப்படும் மின்சாரம் மிகவும் குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்பட்டாலும் அவற்றை கொண்டு செல்வதற்கு போதிய வசதிகள் இல்லாதது பிரச்சினைகளாக உள்ளது.

இதன் காரணமாக எனது அரசு ரூ. 5998 கோடி செலவில் 2 திட்டங்களை தமிழ்நாடு மின்கழகம் மூலம் செயல்படுத்த திட்டம் தீட்டியது. இந்த திட்டங்கள் மத்திய புதுப்பிக்க தக்க எரிசக்தி துறையிடம் வழங்கப்பட்டது. இது போன்ற திட்டங்களுக்கு நிதி உதவி செய்ய தேசிய தூய்மை எரிசக்தி நிதி மத்திய அரசு மூலம் உருவாக்கப்பட்டு உள்ளது. மத்திய நிதி துறையின் வழிகாட்டுதலின் படி இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டங்களுக்கு மத்திய தூய்மை மின்சக்தி நிதியில் இருந்து 40 சதவீதம் உதவி கிடைக்க வேண்டும். அதன்படி ரூ.1500 கோடி வழங்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான கோப்பு உரிய அனுமதிக்காக தற்போது நிதித்துறை செயலாளர் தலைமையில் உள்ள இன்டர் அமைச்சரவை குழு முன்பு வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த அமைப்பு நிதி உதவி வழங்குவதற்கு உரிய ஒப்புதல் அளிக்கவில்லை.

இது மத்திய அரசின் கொள்கைக்கு எதிராக உள்ளது. தூய்மை புதுப்பிக்க சக்தி மின் திட்டத்தில் முன்னணி மாநிலமாக திகழும் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க மறுப்பது எங்களுக்கு கவலை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இன்டர் அமைச்சரவை குழு எடுத்த முடிவு நியாயமற்றது. இந்த திட்டங்களுக்கு மத்திய மின்துறை, புதிய புதுப்பிக்க தக்க மின்சக்தி துறை, மத்திய திட்ட கமிஷன் ஆகியவை ஒத்துழைப்பு அளித்துள்ள நிலையில் இன்டர் அமைச்சரவை குழு இந்த தவறான முடிவை எடுத்திருக்கிறது.

எனவே தாங்கள் உடனடியாக தலையிட்டு மத்திய நிதித்துறையிடம் பேசி தமிழ்நாட்டுக்கு இந்த திட்டங்களுக்கு ரூ.1500 கோடி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

pr16092013_4961 copypr16092013_496-12 copypr16092013_496-23 copy

 

Leave a Reply