கென்ய தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட் கோஸ்ட் என்ற 4 மாடி வணிக வளாகத்திற்குள் கடந்த 21.09.2013 சனிக்கிழமையன்று அல்கொய்தாவுடன் தொடர்புடைய சோமாலியா அல் ஷபாப் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 2 இந்தியர்கள் உள்பட 68 பேர் கொல்லப்பட்டனர்.
பிணையக்கைதிகளாக சிலரை பிடித்து வைத்துள்ள அந்த இஸ்லாமிய அல் ஷபாப் தீவிரவாதிகள், மூன்றாவது நாளாக இன்றும் பாதுகாப்பு படையினருடன் சண்டையிட்டு வருகின்றனர். இன்று நடந்த சண்டையின் போது அந்த வணிக வளாகத்திற்குள் 4 மிகப்பெரிய குண்டுகள் வெடித்தன. இதையடுத்து அந்த வணிக வளாகத்தின் மேலே நீண்ட நேரம் கரும்புகை வெளியேறியது. மேலும், வணிக வளாகத்திற்குள் தீப்பிடித்து எரிவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் பிணையக்கைதிகளில் நிலைமை கவலையளிப்பதாக கூறப்படுகிறது.
இந்த சண்டையில் பிணையக் கைதிகளை பிடித்து வைத்திருந்த இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பிணையக்கைதிகள் சிலரை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாகவும் கென்ய அதிகாரிகள் தெரிவித்தனர். வணிக வளாகத்தை சுற்றிலும் ராணுவம் மற்றும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வணிக வளாகத்திற்குள் இருக்கும் 10-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் அல்கொய்தாவுடன் தொடர்புடைய பல நாட்டு தீவிரவாதிகளாக இருக்கலாம். இந்த தாக்குதலில் கென்யர்கள் தவிர பிரிட்டன், பிரெஞ்சு, கனடா, இந்தியன், கானா, தென் ஆப்பிரிக்கா, சீனா நாட்டை சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.