இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வட மாகாண முதலமைச்சரை சந்திக்க உள்ளார்!

salman

அடுத்த மாதம் ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், வடக்கு மாகாணத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை சந்திக்க உள்ளார்.

வடக்கில் நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்று ரீதியான வெற்றியை பெற்றது.

நல்லிணக்கம் மற்றும் அதிகார பரவலாக்கம் தொடர்பில் முக்கியமான தருணமாக அமைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் இந்திய அமைச்சரின் விஜயம் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகிறது.

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சல்மான் குர்ஷித் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர் அக்டோபர் 7 , 8 தேதிகளில் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரியவருகிறது.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்திக்கும் குர்ஷித், அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திக்க உள்ளார்.

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா கடைசியாக 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

அதற்கு பின்னர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த நிலையில் தெற்காசிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் அதன் ஒரு பகுதியாக இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

ஏற்கனவே அவர் பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு, பூட்டான் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார்.