காவிரி நதி நீர் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பின்படி மத்திய அரசு விரைந்து செயல்பட்டு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை உடனே அமைத்து, அதை நடைமுறைப்படுத்தியிருந்தால், தமிழகத்தில் உள்ள காவிரி பாசன விவசாயிகள் அனைவரும் நிம்மதியடைந்திருப்பார்கள்.
ஆனால், கர்நாடக அரசியல் மற்றும் தேர்தல் காரணங்களுக்காக தாமதப்படுத்தியதின் விளைவு, கால்நடைகள் குடிப்பதற்குகூட தண்ணீர் இன்றி தமிழகம் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கிறது.
தமிழக விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களின் நிலை முற்றிலும் கவலைக்கிடமாக இருக்கிறது. இந்த ஆண்டு விவசாய சாகுப்படி நடைபெறுமா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் கூட, தமிழகத்திற்கு உபரி நீரைக் கூட திறந்துவிடாமல் இரக்கமற்ற, அரக்கத்தனமாக கர்நாடக முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி இருந்து வருகிறார். இந்த விசியத்தில் மத்திய அரசும் மௌனம் சாதித்து வருகிறது.
எக்காரணத்தை முன்னிட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதில், கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் உறுதியாக இருக்கின்றன. நேற்று நடைப்பெற்ற அனைத்துக் கட்சி கூட்டமே இதற்கு சான்று. இது திட்டமிட்டே தமிழகத்தையும், தமிழக விவசாயிகளையும் வஞ்சிக்கும் செயலாகும்.
இல்லாமை வேறு; இயலாமை வேறு; ஆனால், விரும்பாமை பாவம்!-என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.
மேலும், கர்நாடக முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமியின் பேச்சும், செயல்பாடும் இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிருக்கும் ஊறுவிளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. புழு, பூச்சிகளுக்கு கொடுக்கும் மரியாதையை கூட, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கர்நாடக முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி கொடுக்கவில்லை.
காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் எங்களுக்கு தேவையில்லை என்றும், அவற்றின் உத்தரவுக்காக நாங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவுகள் எங்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்றும், பகிரங்கமாகவே கர்நாடக முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி பேசிவருகிறார்.
உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத ஒருவர், எப்படி ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்க முடியும்? இது நீதியையும், நீதிபதிகளையும், நீதிமன்றத்தையும் அவமதிக்கும் செயலாகும்.
இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
நாளை என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துப் பார்ப்போம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com