வட மாகாணத்தின் முதலமைச்சராக சி.வி. விக்னேஸ்வரன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இந்நிகழ்வு அலரி மாளிகையில் இடம் பெற்றது. 25 வருடங்களுக்கு பின்பு வடமாகாணத்தில் கடந்த செப்டெம்பர் 21-ஆம் தேதி இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி அமோக வெற்றியீட்டி 30 இடங்களை கைப்பற்றியது.
இலங்கை தமிழரசுக் கட்சியில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட சி.வி. விக்னேஸ்வரன் 132,255 வாக்குகளை பெற்றார். வடக்கு கிழக்கு தேர்தல் வரலாற்றில் அதிக வாக்குகளை பெற்ற பெருமையும் தமிழரசுக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரனையே சாரும். இதன் பின்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாணசபைக்கு தெரிவு செய்யபட்ட 28 உறுப்பினர்களும் சி.வி.விக்னேஸ்வரனை வட மாகாண முதலமைச்சராக கடந்த செப்டெம்பர் மாதம் 23-ஆம் தேதி ஏகமனதாக தெரிவு செய்தனர்.
இந்நிலையில் வடமாகாண முதலமைச்சர் சத்தியப்பிரமாணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த வடமாகாண மக்களை கருத்திற்கொண்டு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன் சத்தியப் பிரமாணம் செய்யக் கூடாது என கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் பகிரங்கமாக வலியுறுத்தினர்.
எனினும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வது நல்லிணக்கத்துக்கான வழி என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.