தூத்துக்குடியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர் இன்று (10.10.2013) கல்லூரி வளாகத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக அக்கல்லூரி மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ளது இன்ஃபன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி. இந்த கல்லூரியின் முதல்வராக நெல்லை மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த சுரேஷ் குமார் (55) என்பவர் பணியாற்றி வந்தார்.
அண்மையில் பாளையங்கோட்டையில் இருந்து பேருந்தில் கல்லூரிக்கு வந்த மாணவியரை கேலி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மூவரை அவர் சஸ்பெண்ட் செய்தார். இம்மூவரே இன்று காலை கல்லூரி வளாகத்தில் வைத்து சுரேஷ் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக செய்திகள் கூறுகின்றன.
படுகாயம் அடைந்த சுரேஷ் குமார் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனையடுத்து அம்மாணவர்கள் டேனிஸ், பிச்சைக்கண்ணு, பிரபாகரன் கைது செய்யப்பட்டனர். இவர்களில் டேனிஸ் சிவகங்கை இலங்கை அகதிகள் முகாமிலிருந்து வந்தவர், பிரபாகரன் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர், பிச்சைக்கண்ணு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் எழுந்த ஆத்திரத்தின் விளைவாய் கொலை செய்யும் அளவு செல்வார்களா அல்லது வேறு ஏதேனும் பின்புலம் இருக்குமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எப்படியும் கல்லூரி வளாகத்திலேயே பட்டப்பகலில் மாணவர்களாலேயே ஒரு முதல்வர் கொலை செய்யப்பட்டிருப்பதென்பது அதிர்ச்சி அளிக்கிறது பெரும் வேதனைக்குரியது, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிர்வாகம் எல்லாம் முறைப்படுத்த வேண்டியது அவசியம் .