உலகிலேயே மிக ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் தங்கள் நாட்டு வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்களை வெளியிட ஸ்விட்சர்லாந்து அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலரும் தங்கள் கருப்புப் பணத்தை ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அவர்களின் விவரங்களை யாருக்கும் வழங்காமல் ஸ்விட்சர்லாந்து அரசு மிக ரகசியமாக பாதுகாத்து வந்தது. இதனால் அதிக வரி ஏய்ப்பு நடப்பதால் தங்கள் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக உலக நாடுகள் குற்றச்சாட்டு எழுப்பின.
இதையடுத்து பொருளாதார கூட்டுறவு மேம்பாட்டு அமைப்பு மாநாட்டில் வெளிநாட்டினர் உள்பட அனைத்து வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு தகவல்களையும் அவர்களின் அனுமதியின்றி, பரஸ்பர நிர்வாக ரீதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நாடுகளிடம் வழங்க ஸ்விட்சர்லாந்து அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஸ்விட்சர்லாந்து அரசு 16.10.2013 புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பல நாடுகளின் கோரிக்கைகளை ஏற்று வங்கிக் கணக்குகளை தானாக வெளியிட ஸ்விட்சர்லாந்து அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
எனினும், இதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஸ்விட்சர்லாந்து நாட்டின் சட்டத்தின்படி, வரிசெலுத்துபவரின் வங்கி கணக்கு விவரங்களை அவர்களின் ஒப்புதல் பெற்றபின்பே வழங்கும் நடைமுறை இருந்து வருகிறது. எனினும், இதில் திருத்தம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை எந்த காரணத்தின் அடிப்படையில் கேட்கிறார்கள் என்பதை பொருத்து அவற்றை அளிக்கவும், குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அதன்பின் தகவல் தெரிவிப்பது குறித்தும் நாடாளுமன்ற விவாதித்தத்துக்கு பின்பு சட்டத்திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு முன்பாக பொது மக்களிடமும் கருத்து கேட்கப்படும் என்று தெரிவித்துள்ளது.