இலங்கை கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் கொடிய வறட்சி நிலை காரணமாக விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் என பலரும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள்.
வழமையாக பெய்ய வேண்டிய பருவ மழை இன்னமும் பெய்யாத நிலையில் அநேக பிரதேசங்களில் நீர்பாசனக் குளங்களும் கிணறுகளும் நீர் நிலைகளும் நீர் இன்றி வற்றி, வறண்டு போய்க் காணப்படுகின்றன.
வறட்சியினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தமது நாளாந்த தேவைக்கான நீரைப் பெறுவதற்கும் குளிப்பதற்கும் பாத்திரங்களுடன் நாளாந்தம் வேறு இடங்களுக்கு செல்வதாக தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.
காடுகளிலுள்ள குளங்களும் தற்போது நீர் வற்றி காணப்படுவதால் காட்டு யானைகள் நீர் தேடி, மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செங்கலடியில், பதுளை நெடுஞ்சாலையிலுள்ள கிராம மக்கள் தொல்லைகளை எதிர்நோக்குகின்றார்கள்.
ஏற்கனவே வறட்சியினால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினையுடன் மற்றுமோர் பிரச்சினையாக காட்டு யானைகளின் தொல்லைகளையும் தாங்கள் சந்திப்பதாக அந்த மக்கள் சுட்டிகாட்டுகின்றார்கள்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் வறட்சியான நிலைமை விவசாயிகளுக்கும் கால்நடைப் பண்ணையாளர்களுக்கும் அவர்களது தொழில் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
பால் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் கால்நடைகளின் உயிரிழப்புகள் காரணமாக கால்நடைப் பண்ணையாளர்கள் பொருளாதாரரீதியில் பெரும் இழப்புகளை சந்தித்து வருவதாக பண்ணையாளர்கள்தெரிவித்தனர்.
மழை இல்லாத காரணத்தினால் 80 சத வீதமான வயல் நிலங்களில் உழவு வேலைகள் கூட இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. மழை பெய்தால்தான் உழவு வேலைகளை மேற்கொண்டு பின்னர் நெல்லை விதைக்க முடியம் என விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.