ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் காட்டுப் பகுதியில் சுமார் 15 இடங்களில் தீப்பற்றி எரிகிறது. காற்று வேகமாக வீசுவதால் தீ மிக வேகமாக கொழுந்துவிட்டு எரிகிறது. இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள சிட்னி, புளு மவுன்டன்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. பாதுகாப்பை கருத்தில்கொண்டு உடனடியாக அங்குள்ள வீடுகளில் இருந்தவர்கள் வெளியேற்றப் பட்டனர்.
காட்டுத் தீயை அணைக்கும் பணியில் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தின் 2,000க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீயணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டுள்ளன. அவை வானில் பறந்தபடி தண்ணீரை பீய்ச்சி வருகின்றன. இருந்தும் முற்றிலும் தீயை அணைக்க முடியவில்லை. தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் போராடி வருகின்றனர். வேகமாக வீசும் காற்றினால் இவர்கள் தீயை அணைக்க சிரமப்படுவதாக தகவல்கள் வருகின்றன.