மேற்கு வங்க மாநில மால்டா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படும் பச்சிளம் குழந்தைகள் அதிக அளவில் இறப்பதாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. கடந்த மே மாதம் 16 குழந்தைகள் இங்கு இறந்துள்ளன. சத்து குறைபாடு மற்றும் எடை குறைவு காரணமாக குழந்தைகள் இறந்ததாக டாக்டர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், மால்டா மருத்துவமனையில் கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் 20 குழந்தைகள் இறந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 10 குழந்தைகள் கடந்த 24 மணி நேரத்தில் இறந்துள்ளன.
டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக குழந்தைகள இறந்ததாக பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குழந்தைகளை மருத்துவமனையில் சேர்க்கும்போது பல மருத்துவ உபகரணங்கள் வேலை செய்யவில்லை என்றும், சில டாக்டர்கள் மட்டுமே சிகிச்சை அளித்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த குற்றச்சாட்டை மறுத்த மருத்துவமனை நிர்வாகம், மால்டா அருகில் உள்ள கிராமங்களில் பிறந்த அந்த குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. அவை அனைத்தும் சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் என்று விளக்கம் அளித்துள்ளது.