இலங்கை இறுதிப்போரில் காணாமல்போனவர்கள் 146,679 பேர்! உண்மை கண்டறியப்பட வேண்டும்: மன்னார் ஆயர் ராயப்பு

Rayappu-போரின் இறுதி எட்டு மாதங்களில் காணாமல் போனதாக கூறப்படும் 146 ஆயிரத்து 679 பேர் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் தமிழர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை முன்வைக்கவேண்டும். அத்துடன் தமிழர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளை மாற்றும் முயற்சியை கைவிடவேண்டும் என்றும் ஆயர் கேட்டுள்ளார். தாம் வன்முறைகளை எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ள ஆயர், விடுதலைப் புலிகள் மேற்கொண்ட வன்முறைகளையும் தாம் கண்டித்தமையை சுட்டிக்காட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் பொதுமக்களை கொலை செய்தமையையும் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ஆயர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கை அரசாங்கம், தமிழர்களை தண்டிக்கும் வகையில் அவர்களை தோல்வியடையச் செய்யும் வகையில், தமிழ் பிரதேசங்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அவர்களின் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்கின்றது என்றும் ஆயர் குற்றம் சுமத்தியுள்ளார்.

போரின் போது அரச பயங்கரவாதம் மற்றும் தமிழர்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தது. அரசாங்கத்தில் உள்ள சிலர் ஒரே மக்கள் ஒரே நாடு என்று கூறுகிறார்கள், இதில் ஒரே நாடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் தமிழர்கள் தனியான இனம், தனியான கலாசாரத்தை கொண்டவர்கள், அவர்களின் அரசியல் அபிலாசைகள் வேறானவை என்று மன்னார் ஆயர் குறிப்பிட்டுள்ளார்.