வாக்காளர் தகுதி பெறும் நாளாக 01.01.2014 அன்றைய தேதியை அடிப்படையாக வைத்து தமிழக சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2014 திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி, 01.10.13 அன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் உத்தரவிட்டார். அன்றிலிருந்து இருந்து 31.10.13 வரை அந்த பட்டியலில் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், பெயர் திருத்தம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என்றும் அறிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்வது குறித்து, சம்பந்தப்பட்ட அலுவலகங்கள், வாக்குச்சாவடிகளில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. மூன்று நாட்கள் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதுமட்டுமல்லாமல் ஆன்-லைன் மூலமாகவும் விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வழிவகை செய்யப்பட்டது. இதற்காக சில கம்ப்யூட்டர் மையங்களுடன் தேர்தல் கமிஷன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியலில் பெயர்களை திருத்தம் செய்ய 31-ந் தேதி மாலை 5 மணியோடு விண்ணப்பம் வாங்கும் பணி நிறைவடைந்தது. இரவு 12 மணியுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறும் பணியும் முடிவடைந்துவிட்டது. இதுவரை சுமார் 22 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இவற்றில் ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யப்பட்ட சுமார் 1.50 லட்சம் விண்ணப்பங்களும் அடங்கும். கடந்த ஆண்டு 23 லட்சம் விண்ணப்பங்கள் வந்திருந்தன. கடந்த ஆண்டில் ஆன்-லைன் மூலம் 19 ஆயிரம் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இனிமேல் இந்த விண்ணப்பங்கள் தொடர்பாக வீடு, வீடாக அலுவலர்கள் வந்து விவரங்களை சரிபார்ப்பார்கள். அதன் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அடுத்த ஆண்டு (ஜனவரி) 6-ந் தேதி வெளியிடப்படும். விண்ணப்பங்களைப் பெறும் தேதி (அக்டோபர் 31) முடிந்துவிட்டாலும் கூட, வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்வதற்கான விண்ணப்பங்களை கொடுக்கலாம்.
அக்டோபர் 31-ந் தேதிக்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் ஜனவரி 6-ந் தேதிக்கு மேல்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலின்போது 6 ஆயிரம் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இதில் 300 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை இவ்வாறு அவர் தெரிவித்தார்.