இந்திய–இலங்கை கடல் எல்லையான கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை நேற்று (04.11.2013) சிறைபிடித்து சென்ற தகவல் வெளியாகி உள்ளது.
ராமேசுவரத்தில் இருந்து 69 விசைப்படகுகளில் நேற்று (04.11.2013) காலை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். தங்கச்சிமடத்தை சேர்ந்த டிக்ளஸ் என்பவரது விசைப் படகில், வினோதன், ஆரோக்கியநாதன், மரியான், ஆபிரகாம், கிளாசியஸ் ஆகிய 5 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 5 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து படகை மோதவிட்டு ராமேசுவரம் மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தியும் உள்ளனர். இன்று (05.11.2013) காலை கரைக்கு திரும்பிய மீனவர்கள் இந்த தகவலை தெரிவித்ததால் ராமேசுவரத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அனைத்து படகுகளும் கரை திரும்பிய பிறகே சிறைபிடிக்கப்பட்டது 5 மீனவர்கள்தானா? மேலும், பலர் சிறைபிடிக்கப்பட்டு இருக்கலாமா? எத்தனை படகுகள் சேதமடைந்துள்ளன என்பது குறித்த விவரம் முழுமையாக தெரிய வரும்.