காவிரி படுகையில் கொட்டப்படும் கழிவுகள்! கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், திருச்சி –  கல்லணை சாலையில் காவிரி ஆற்றின் வலது கரையில் புத்தாபுரம்  முதல் வேங்கூர் பூசைப்படித்துறை வரை வனத்துறைக்கு சொந்தமான 83.28 ஹெக்டேர் பரப்பளவு காப்பு காடுகள் உள்ளது.

இங்கு மயில்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. மேலும், காட்டுப்பூனை, கீரி, எறும்பு தின்னி, குரங்கு, நரி, உடும்பு, பாம்பு மற்றும் அனைத்து வகையான பறவைகளும், ஏராளமான வன உயிரினங்களும் இப்பகுதியில் சுதந்திரமாக சுற்றித்திரிந்து வாழ்ந்து வருகின்றன.

இந்த வனப்பகுதியில் அடிக்கடி தீப்பற்றி கொள்வதால் மரங்களும் வனஉயிரினங்களும் பெருத்த சேதமடைந்து வருகின்றன. தீ வைக்கும் சமூக விரோதிகளை வனத்துறையினர் இது வரையிலும் கண்டு கொள்ளவில்லை.

அடிக்கடி தீப்பிடிப்பதற்கான முக்கிய காரணம் திருவெறும்பூர் மற்றும் காட்டூர் பகுதியிலிருந்து கொண்டுவந்து கொட்டப்படும் இரசாயன கழிவுகள்தான் முக்கிய காரணம் என்பது தற்போது தெரியவருகிறது. காவிரிப்படுகை சாலை ஓரங்களில் கொட்டப்படும் கழிவுகளை தீயிட்டு கொழுத்திவிடுவதால் இதுபோன்ற தீவிபத்துகள் ஏற்படுகின்றன.  அப்பகுதி முழுவதும் திறந்த வெளியாக இருப்பதாலும், சமூக விரோதிகளின் புகலிடமாக அமைந்துள்ளது.

அவ்வனப்பகுதிக்குள் சட்ட விரோதமாக நடமாடும் நபர்கள் பயன்படுத்திவிட்டு நெருப்போடு வீசியெறியும் பீடி, சிகரெட் மற்றும் சுருட்டு துண்டுகளால் வனப் பகுதியில் அடிக்கடி தீ பற்றி கொள்கிறது. இதனால் ஊர்வன, நடப்பன மற்றும் பறப்பன போன்ற உயிரினங்களுக்கு பெருத்த உயிர் சேதமும், காயமும் ஏற்படுகிறது.

இதுக்குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு பலமுறை எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும், இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலை தொடர்ந்து நீடித்தால், காவிரி படுகை முழுவதும் தீக்கு இரையாகிவிடும் ஆபத்து இருக்கிறது.

– கே.பி.சுகுமார்.

Leave a Reply