குடிபோதையில் தோழியுடன் கார் ஓட்டிய ஐ.ஏ.எஸ். அதிகாரி!-பைக் மீது மோதியதில் பத்திரிகையாளர் பலி!

திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மதுபாரில் தோழியுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு, குடிபோதையில் இரவு நேரத்தில் கார் ஓட்டி வந்த கேரள மாநில அமைச்சரவையில் சர்வே இயக்குநராக பணியாற்றி வந்த வெங்கட்ராமன் என்ற 33 வயது ஐ.ஏ.எஸ். அதிகாரி, மியூஸியம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் (பைக்) பணி முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிராஜ் எனும் மலையாள நாளேட்டின் தலைமை செய்தியாளர் கே.எம்.முகமது பஷீர் (வயது 35) என்பவரின் பைக் மீது மோதியதில், பத்திரிகையாளர் கே.எம்.முகமது பஷீர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ஐஏஎஸ் அதிகாரி வெங்கட்ராமன், அவரது தோழி வாபா பெரோசு ஆகியோரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், முதலில் தனது தோழிதான் கார் ஓட்டினார் என்று ஐஏஎஸ் அதிகாரி வெங்கட்ராமன் தெரிவித்தார்.

அவரது தோழி வாபா பெரோசுவிடம்  தனியாக அழைத்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, காரை ஐஏஎஸ் அதிகாரி வெங்கட்ராமன் ஓட்டினார், தான் பின்னால் அமர்ந்திருந்ததாகத் தெரிவித்தார். இருவரும் முரணான வாக்கு மூலங்களை அளித்தனர். 

அதன்பின் வெங்கட்ராமனிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அவர் தான் கார் ஓட்டினேன் என ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து ஐபிசி 279 பிரிவு, 304ஏ ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

என்ன படித்திருந்தாலும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் தனிப்பட்ட ஒழுக்கமும், உண்மையும் இல்லாவிட்டால் இதுபோன்ற அவமானங்களை சந்தித்தே ஆகவேண்டும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

Leave a Reply