காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட காளைமாடுகள்! –  மீட்பு பணிக்கு உத்தரவிட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தலைமை இயக்குனர்!

காவிரி ஆற்று வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட மாடுகள்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், கீழமுல்லக்குடி ஊராட்சி, காந்திபுரம் கிராமத்தில் வசித்துவரும் தேவதாஸ் என்கிற பிரபு, மணி என்கிற பெல்சன்ராஜ் மற்றும் ராமு என்கிற ராமச்சந்திரன் ஆகியோர் தங்கள் மாடுகளை மேய்ச்சலுக்காக இன்று (13.09.2019) காவிரி படுகைக்கு ஓட்டிச்சென்றனர்.

வேங்கூர் பூசைப்படித்துறை கல்லணை பிரிவு சாலை அருகே வழக்கம் போல படுகை ஓரமாக மேய்ந்து கொண்டிருந்த 7 காளை மாடுகளும், எதிர்பாராத விதமாக காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன. வெள்ளத்தில் நீந்தி சென்ற காளை மாடுகள் ஆற்றுக்கு நடுவில் இருந்த சிறிய திட்டில் சிக்கிக்கொண்டது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாடுகளின் உரிமையாளர்கள், உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு 101 எண் மூலம் தகவல் தெரிவித்தனர்.

“பாபநாசம் அருகே நடந்த படகு விபத்திற்காக திருச்சியில் உள்ள அனைத்து வீரர்களும், படகு உட்பட பாதுகாப்பு மற்றும் மீட்பு உபகரணங்களும் எடுத்துச்செல்லப்பட்டு 3 நாட்கள் ஆகின்றது. மீட்பு பணிக்கு வீரர்களும் இல்லை, படகும் இல்லை. பாபநாசத்திலிருந்து வீரர்கள் திரும்பி வந்த பிறகு பார்க்கலாம்” என்று, திருச்சி தீயணைப்பு துறையினர் தீர்மானமாக சொல்லிவிட்டனர்.

இந்நிலையில், நமது “உள்ளாட்சிதகவல்” இணைய ஊடகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய நமது “உள்ளாட்சித்தகவல்“ ஆசிரியர் Dr.துரைபெஞ்சமின் அவர்கள், தீயணைப்புத்துறையினருக்கு 101 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டார்.

“தண்ணீரில் போன மாடுகள் தானாகவே திரும்பி வந்துவிடும்  என்றும், எங்களிடம் வீரர்களும் இல்லை, படகு மற்றும் தளவாடங்களும் இல்லை. அதனால் மீட்பு பணிக்கு இப்போது வரமுடியாது என்றும், நான் பேசுவது யார் என்று பெயர் சொல்ல முடியாது என்றும், வேண்டுமானால் (D.F.O) டிவிசனல் ஃபயர் ஆபிசரிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று சொன்னதின் அடிப்படையில், நமது “உள்ளாட்சித்தகவல் “ ஆசிரியர்  94450 86393 என்ற DFO எண்ணிற்கு இன்று (13.09.2019) பகல் 02.24 மணிக்கு தொடர்புகொண்டார். ஆனால், அலைபேசி அழைப்பை யாரும் ஏற்கவில்லை.

அதன்பிறகு, திருச்சி தீயணைப்புத்துறை  துணை இயக்குனர் அலுவலகத்திற்கும், திருச்சி மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி அலுவலகத்திற்கும் தொடர்பு கொண்டதின் விளைவாக, திருச்சி மாவட்ட உதவி தீயணைப்புதுறை அதிகாரியிடம் தெரிவிக்கும்படி, அதற்கான அலைபேசி எண்ணை கொடுத்தனர். அதனடிப்படையில், 94450 86394 என்ற அலைபேசி எண்ணிற்கு நமது “உள்ளாட்சித்தகவல்” ஆசிரியர் தொடர்பு கொண்டார்.

மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு படகு இல்லை என்றும், நாங்கள் என்ன செய்ய முடியும்? என்று எதிர் கேள்வி கேட்டார். சம்பவ இடத்தை பார்வையிடாமலேயே இதுபோன்று பதில் அளிப்பது நியாயமா? என்று ஆசிரியர் கேட்டதற்கு, சம்பவ இடத்திற்கு ஆட்களை அனுப்பி வைக்கிறேன் என்று திருச்சி மாவட்ட உதவி தீயணைப்புதுறை அதிகாரி கூறினார். ஆனால், உடனடியாக சம்பவ இடத்திற்கு வீரர்கள் யாரும் வரவில்லை.

இவர்களை நம்பினால் வாயில்லா ஜீவன்களை காப்பாற்ற முடியாது என்று உணர்ந்த நமது “உள்ளாட்சித்தகவல்” ஆசிரியர், இன்று (13.09.2019) மாலை 03.19 மணிக்கு தமிழ்நாடு தீயணைப்பு மீட்புத்துறை D.G.P மற்றும் இயக்குனர் அலுவலகத்தை தொடர்புகொண்டு நடந்த விவரத்தை தெளிவாக எடுத்துரைத்தார். நிலைமையின் அவசரத்தையும், தீவிரத்தையும் உணர்ந்து கொண்ட D.G.P அலுவலக அதிகாரி, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன் என்று உறுதி அளித்ததோடு, அதற்கான உத்தரவையும் உடனடியாக பிறப்பித்தார். அதனடிப்படையில், இன்று (13.09.2019) மாலை 05.00 மணியளவில் காவிரி ஆற்றாங்கரைக்கு தீயணைப்புத்துறை வீரர்கள் வாகனத்தோடு வந்து இறங்கினர்.

இதற்கு முன்னதாக இன்று (13.09.2019) மாலை 04.54 மணிக்கு நமது “உள்ளாட்சித்தகவல்” ஆசிரியர் அவர்களை தொடர்பு கொண்ட திருச்சி மாவட்ட உதவி தீயணைப்புத்துறை அதிகாரி கருணாகரன், நடந்த சம்பவத்திற்காக வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறிதோடு, 101 அவசர அழைப்பை ஏற்று முறையாக பதில் அளிக்காத, பணியில் அலட்சியமாக இருந்த அந்த நபர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி எனக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது. மாடுகளை மீட்பதற்காக சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்துள்ளார்கள் என்ற தகவலையும் தெரிவித்தார்.

இந்நிலையில், காவிரி ஆற்றுப்பகுதிக்கு வந்த தீயணைப்புத்துறையினர் மேற்பார்வையில், நீச்சல் தெரிந்த உள்ளூர் இளைஞர்களின் உதவியுடன் மாடுகள் பத்திரமாக மீட்கப்பட்டது.

காவிரி ஆற்றில் சிக்கித்தவித்த வாயில்லா ஜீவன்களை மீட்பதற்காக பெருமுயற்சி எடுத்த நமது “உள்ளாட்சித்தகவல்” ஆசிரியர் Dr.துரைபெஞ்சமின் அவர்களுக்கும், ஆசிரியரின் கோரிக்கையை ஏற்று மாடுகளை மீட்பதற்கு போர்கால அடிப்படையில் உத்தரவிட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தலைமை இயக்குனர் (DGP) அவர்களுக்கும், உயிரை பணையம் வைத்து காவிரி ஆற்று வெள்ளத்தில் நீந்தி சென்று மாடுகளை மீட்பதற்கு உதவி செய்த இளைஞர்களுக்கும், நமது “உள்ளாட்சித்தகவல்” வாசகர்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

  – கே.பி.சுகுமார்  &  UTL TEAM.

 

 

One Response

  1. MANIMARAN September 14, 2019 4:33 pm

Leave a Reply