சென்னையில் கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு இன்று (11.12.2013) காலை தொடங்கியது. மாநாட்டை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்து பேசியதாவது:–
கடந்த 2011–ம் ஆண்டு மே மாதம் எனது அரசு பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு நடைபெறும் இந்த 3–வது வருடாந்திர கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நமது மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்ட நடவடிக்கைகள் பற்றி இந்த தருணத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நமது கனவான தமிழ்நாட்டை முன்னேறிய மாநிலமாக மாற்றுவதற்கான குறிக் கோள்படி நிகழ்த்திய சாதனைகள் மற்றும் சிறப்பான செயல்பாடுகள் பற்றி பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த மாநாடு அமைந்துள்ளது.
கடந்த 2½ ஆண்டு காலத்தில் நிர்வாகத்தில் நாம் குறிப்பிடத்தக்க சாதனை களை நிகழ்த்தி இருக்கிறோம்.இந்த அரசானது ஏழை மற்றும் அடிதட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக அவர்களுக்கு அடிப்படை தேவைகளான உணவு, துணி மணிகள், தங்குமிடம் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பின் தங்கியோருக்கான அடிப்படை வசதிகளுடன் கூடிய வளர்ச்சி திட்டங்கள் முதலீடுகள், வளர்ச்சி, தரமான கல்வி, ஆரோக்கியமான வாழ்வுக்கான மருத்துவ காப்பீடு, வேலை வாய்ப்பை பெருக்குவதற்கான ஆற்றலை மேம்படுத்துதல் போன்றவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்.
பல்வேறு பிரிவினருக்காக செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பான திட்டங்களுக்காக மாநில அரசு தேசிய அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. மக்கள் மீது சிறந்த கரிசனம் கொண்ட தலைமை, மக்களுக்காக சிறந்த திறமையான நிர்வாகம், பல்வேறு நிலைகளில் அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசு அதிகாரிகள் ஆகிய மூன்று காரணங்களால் மட்டுமே இந்த சாதனை நிகழ்த்த முடிந்தது.
நமது குறிக்கோள்கள் நிறைவேறும் வரை நமக்கு ஓய்வு கிடையாது. நமது சிறப்பான செயல்பாடுகள் தொடரும். 2023 தொலை நோக்கு திட்டங்களை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். அதற்கு இன்னும் 10 ஆண்டுகள் தான் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்ததாக நாம் முதலாவது கவனத்தில் கொள்ள வேண்டியது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பல்வேறு சிக்கலான பிரச்சினைகளில் மக்களின் எண்ணங்களை எனது அரசு புரிந்து கொண்டு, தமிழ்நாட்டில் பொது அமைதியை நிலை நாட்டியது. இதற்காக கீழ்மட்டத்தில் உள்ள அரசு நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி கண்காணித்து மக்களின் எண்ணங்களை நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்து சட்டம்–ஒழுங்கு பராமரிப்பில் தீவிரகவனம் செலுத்தப்பட்டு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் நாம் பெருமையும் திருப்தியும் கொள்கிறோம். தமிழ்நாடு சாதி–மத மோதல் இல்லாத மிகப்பெரிய மாநிலமாக விளங்குகிறது. இடது சாரி தீவிரவாதம் மற்றும் மத ரீதியிலான வன்முறைகள் எங்கும் கிடையாது.
சட்டம்–ஒழுங்கு பராமரிப்பு விஷயத்தில் காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை சுதந்திரமாக செயல்பட அனுமதித்ததன் மூலம் இந்த சாதனை நிகழ்த்த முடிந்தது.
தமிழ்நாட்டில் சாதி மோதல்களை தூண்டி பதட்டத்தை உருவாக்க யார் காரணமாக இருந்தாலும் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு அரசு சும்மா இருக்காது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
அப்படிப்பட்ட சமூக விரோதி சக்திகளை காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் இரும்புகரம் கொண்டு அடக்க முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் மாவோயிஸ்ட் ஊடுருவல் முயற்சி தடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தையொட்டியுள்ள கேரளா, கர்நாடகம், ஆந்திரா எல்லைகளில் ஓய்வு இல்லாத கண்காணிப்பு நக்கலைட்டுகள் பற்றிய உளவு துறையின் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் இடது சாரி தீவிரவாதம் தலை காட்ட முடியாமல் ஒடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.