தனியாருக்கு ஆதரவாக செயல்பட்ட, வருவாய் துறையினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்.

சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுக்காவிற்குட்பட்ட அசம்பூர் கிராமத்தில் கேஸ்கேட் எஸ்டேட்டிற்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம், அசம்பூர் கிராம மக்கள் சிலர், குடிசைகள் அமைத்து குடியேற முயன்றனர். வருவாய் துறையினர் அந்த குடிசைகளை அகற்றி, பின்னர் அங்கு, வருவாய் துறைக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. பின்னர் அந்த இடத்தில் கிராம மக்களுக்கு வீடு கட்ட நிலம் ஒதுக்க வேண்டும் என வருவாய்துறைக்கு கிராம மக்கள் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று, வருவாய் துறையினர் அந்த நிலத்தில் சாலையோரம் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அங்கு வந்த கிராம மக்கள், எஸ்டேட்டை ஒட்டி வேலி அமைக்காமல், சாலையோரம் மட்டும் வேலி அமைப்பது ஏன் என்றும், முதலில் எஸ்டேட் பகுதியில் வேலி அமைத்து, பின்னர் சாலையோரம் வேலி அமைக்க வேண்டும் என வருவாய்த் துறையினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன், இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். சில நாட்கள் கழித்து, ஒரே சமயத்தில், நிலத்தின் அனைத்து பக்கங்களிலும் வேலி அமைக்க வருவாய்துறையினர் ஒப்புக்கொண்டதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

– நே.நவீன் குமார்,

Leave a Reply