2000 ரூபாய் பணத்தாள் அச்சடிப்பு அடியோடு நிறுத்தம்!-பதட்டத்தில் இருக்கும் பதுக்கல்காரர்கள்.

இந்தியாவில் 2000 ரூபாய் பணத்தாள் அச்சடிப்பு அடியோடு நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பண முதலைகளையும், பதுக்கல்காரர்களையும் பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி  2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08 ஆம் தேதி இரவிலிருந்து கருப்பு பண புழக்கத்தை முடக்கும் பொருட்டு அப்போது புழக்கத்தில் இருந்து வந்த 1000, 500 ரூபாய் பணத்தாள்கள் செல்லாது என்று அறிவித்தார். ஆனால், அதற்கு பதிலாக 500 மற்றும் 2000 ரூபாய் ஆகியவற்றின் புதுவடிவ பணத்தாள்கள் 11 ஆம் தேதி நவம்பர் 2016 அன்று வங்கிகளில் கிடைக்கும் என்று தெரிவித்தார். 66 மி.மீ உயரமும், 166 மி.மீ அகலமும் கொண்ட  2000 ரூபாய் புதுவடிவ  பணத்தாள் அச்சடித்து புழக்கத்தில் விடப்பட்டது. இச்சம்பவம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

1000 ரூபாய் பணத்தாள்கள் செல்லாது என்று அறிவித்துவிட்டு 2000 ரூபாய் பணத்தாள் புழக்கத்தில் விடுவது எந்த வகையில் நியாயம்? இதன் மூலம் எப்படி கருப்பு பணத்தை ஒழிக்க முடியும்? என்ற கேள்வி உலகம் முழுவதும் எதிரொலித்தது. கடும் அதிருப்தி எழுந்தது. அது இன்றுவரை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசாங்கம் அப்போது உண்மையிலுமே திட்டமிட்டது என்னவென்றால், பழைய 1000, 500 ரூபாய் பணத்தாள்களை பெற்றுகொண்டு 2000 ரூபாய் பணத்தாள் வழங்குவது. அதன் பிறகு 2000 ரூபாய் பணத்தாள்களை திரும்பபெற்றுகொண்டு புதிய 500 ரூபாய் பணத்தாள்களை வழங்குவது.

ஆனால், முறையான திட்டமிடல் இல்லாதக்காரணத்தால் ATM இயந்திரம் முதல் அனைத்திலுமே குழப்பம் ஏற்பட்டு மிகப் பெரிய பிரச்சனை உருவானது. குழந்தை பிறந்த பிறகு சட்டை தைப்பதற்கு பதிலாக, தயார் செய்து வைத்திருந்த சட்டைக்கு தகுந்தாற்போல் குழந்தையை வெட்டிய கதையாக இத்திட்டம் அப்பாவி நடுத்தர ஏழை மக்களுக்கு பெரும் பாதிப்பை உருவாக்கியது. ஆனால், பண முதலைகளுக்கும், பதுக்கல்காரர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வழக்கம்போல தரகர்களின் உதவியுடன் 2000 ரூபாய் பணத்தாள்களை வாங்கி பத்திரமாக பதுக்கிக்கொண்டனர்.

இந்நிலையில், இதுவரை அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்ட 2000 ரூபாய் பணத்தாள்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி உயர் மதிப்புக் கொண்ட பணம், மதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்னர் கடந்த 2016 – 17 மற்றும் 2017 -18ம் நிதியாண்டுகளில் ரூ.2000 பணத்தாள்கள் அச்சிடப்பட்டது. ஆனால், 2019 – 2020-ம் நிதியாண்டில் ஒரு நோட்டு கூட அச்சிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவிப்பதற்காகவும், ஊழல் தடுப்பதற்காகவும் 2000 ரூபாய் பணத்தாள்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தனது பதிலில் தெரிவித்துள்ளது.

இதனால் 2000 ரூபாய் பணத்தாள் எந்த நேரத்திலும் திரும்பபெறப்படலாம் என்ற அச்சம் பண முதலைகளையும், பதுக்கல்காரர்களையும் பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

 

 

 

One Response

  1. MANIMARAN October 15, 2019 8:38 am

Leave a Reply