மகாராஷ்டிராவில் பாஜகவை ஆட்சியமைக்க அனுமதித்ததில் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி ஒருதலைபட்சமாக முடிவெடுத்திருப்பதாக கூறி, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்ஜீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை விசாரணை நடத்தியது.
மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, மகாராஷ்டிரா பாஜ சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். மறுபுறம், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சிவசேனாவுக்கும், அபிஷேக் மனு சிங்வி என்சிபி கட்சிக்கு ஆதரவாகவும் வாதாடினர். மத்திய அரசின் சார்பில், அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜரானார். தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் தரப்பில், தலா ஒரு வழக்கறிஞர் ஆஜராகினர்.
அப்போது, மகாராஷ்டிராவில் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரின் கடிதம் சீலிட்ட உறையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் கடிதங்களும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அத்துடன் 54 தேசியவாத காங். எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் என அஜித்பவார் ஆளுநரிடம் அளித்திருந்த கடிதங்களும் தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த ஆவணங்களை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தாக்கல் செய்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதென்றால் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி நிரூப்பிக்கலாமே? இது போன்ற வழக்குகளில் 24 மணி நேரம் அல்லது 48 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். எனவே, இந்த வழக்கில் நாளை (26.11.2019) காலை 10.30 மணிக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.
-எஸ்.சதிஸ் சர்மா.
Immm