தென் ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்திலுள்ள எல்லையோர போலிஸ் சோதனைச் சாவடியைத் தாக்க முயன்றதாக சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சின் பேச்சாளர் இந்த விவரத்தை தெரிவித்துளார். அந்தச் சிறுமிக்கு 10 வயது இருக்கலாம் என்றும் அவரது பெயர் ஸ்போஸ்மேய் என்றும் தெரிகிறது.
தலிபான் தளபதிகள் ஒருவரின் இளைய சகோதரி அச்சிறுமி என்றும் தாக்குதல் நடத்துமாறு அந்தத் தளபதியே சிறுமியை ஏவியதாகவும் போலிசார் தெரிவித்தனர். தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குரிய அங்கியை அச்சிறுமி அணிந்து தாக்குதலுக்கு முற்பட்டதை ராணுவ வீரர் ஒருவர் நேரில் கண்டதாக செடிக் செடிகி என்னும் அப்பேச்சாளர் கூறினார்.
கைது செய்யப்பட்ட பின்னர் அந்தச் சிறுமி அதிர்ச்சியிலும், ஒரு குழப்ப நிலை யிலும் உள்ளார் என்று கூறப்படுகிறது. அவர் அணிந்திருந்த தற்கொலைத் தாக்குதல் அங்கியில், வெடிக்கச் செய்வதற்குரிய விசையை அவரால் கையாள முடியவில்லை என்று கூறப்படுகிறது. தாக்குதலுக்கு முன்னர் போலிசாரால் அச்சிறுமி சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.