தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து, ஆந்திர மாநில, காங்கிரஸ் முதல்வர், கிரண்குமார் ரெட்டி, எந்த நேரத்திலும் பதவி விலகுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. அவர், தன் ஆதரவாளர்களுடன், காங்கிரசிலிருந்து விலகி, தனிக்கட்சி துவங்கும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திராவைப் பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க, காங்கிரஸ் மேலிடம் இசைவு தெரிவித்தது. இதையடுத்து, மத்திய அமைச்சரவையும் இதற்கு ஒப்புதல் வழங்கியது. தெலுங்கானா பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதை அடுத்து, அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர். எனினும், ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திர மக்கள், மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா பிரச்னை துவங்கிய காலம் முதலே, மாநில மற்றும் மத்திய அரசியலில் தீராத தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதில், எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்க முடியாமல், அரசியல் தலைவர்கள் குழம்பி வருகின்றனர்.
இந்நிலையில், மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின், தெலுங்கானா அறிவிப்பு, ஒருதரப்பு மக்களை திருப்திபடுத்தினாலும், மறுபக்கம், பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநில பிரிவினைக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பை விட, தெலுங்கானா உருவானால், ஐதராபாத் யாருக்கு என்ற பிரச்னை முன்னிலை வகிக்கிறது.
தெலுங்கானா தனி மாநிலம் உருவானால், ஐதராபாத் நகரை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில், ஆந்திரப் பகுதி மக்களும், ஐதராபாத்தை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க முடியாது என்ற நிலைப்பாட்டில், தெலுங்கானா ஆதரவாளர்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
தெலுங்கானா அறிவிப்பை தொடர்ந்து, தெலுங்கானா ஆதரவாளர்களை திருப்திபடுத்தியுள்ளதன் மூலம், லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது.எனினும், ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், காங்கிரஸ் தலைமையிலான, மத்திய அரசின் செயல்பாட்டில் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், எதிர் வரும் தேர்தல்களில், காங்கிரசுக்கு பெருத்த அடி காத்திருப்பதாக, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
எனவே, காங்கிரஸ் மேலிடத்தின் செயல்பாட்டால், மக்கள் செல்வாக்கை இழந்து, அரசியல் வாழ்க்கை சூன்யமாகி விடுமோ என்ற அச்சத்தில், ஆந்திர முதல்வரும், மாநில காங்கிரஸ் மூத்த தலைவருமான, கிரண்குமார் ரெட்டி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதற்கான, தெலுங்கானா மறுசீரமைப்பு மசோதா, இன்னமும், ஆந்திர சட்டசபையில் தான் உள்ளது. அதன் மீது, விவாதம் நடத்தி, நிறைவேற்ற முடியாத அளவிற்கு, கூச்சல், குழப்பம் நிலவுகிறது. இத்தகைய நடவடிக்கைகளால், தெலுங்கானா மசோதாவை, மாநில சட்டசபையில் நிறைவேற்ற முடியாத நிலை காணப்படுவதால், தனி மாநிலப் பிரிப்பு, இன்னும் சில நாட்களுக்கு தள்ளிப் போகும்.
தன் எதிர்ப்பை மேலும் பதிவு செய்யும் விதமாக, டில்லியில் கூடிய, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்காமல், புறக்கணிப்பு செய்தார், மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி. இதன் மூலம் அவர், ஒருங்கிணைந்த ஆந்திர மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். இதை அடிப்படையாக வைத்தும், தொடர்ந்து, தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் கிரண்குமார் ரெட்டி, தனிக்கட்சி துவக்கும் முடிவிலும் உறுதியாக உள்ளார்.
இதன் காரணமாக, கட்சி மேலிட நடவடிக்கைக்கு உள்ளாகும் வாய்ப்பு, கிரண்குமாருக்கு உள்ளது. அதற்கு முன்னதாகவே, கட்சியிலிருந்து விலகி விடவும் அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், அவர் எப்போது தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார்; புதிதாக, கட்சியை எப்போது துவக்குவார் என்பது இன்னமும் முடிவாகவில்லை.
அவர் மீது, கட்சி மேலிடம் எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்து தான், அவரின் அடுத்தகட்ட நடவடிக்கை அமையும். காங்கிரசுக்காக தன் நீண்ட கால அரசியல் வாழ்க்கை, மண்ணுக்குள் புதைவதை விரும்பாத கிரண்குமார், தன் அரசியல் எதிர்காலம் கருதி, காங்கிரஸ் கட்சியை கை கழுவ திட்டமிட்டுள்ளார். இதற்காக, தன் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர், சந்திரசேகர ராவை திருப்திபடுத்தும் வகையில், தெலுங்கானா தனி மாநில அறிவிப்பை வெளியிட்டுள்ள, காங்கிரஸ் மேலிடம், ஆண்டாண்டு காலமாக கட்சிக்காக, பாடுபட்டு வரும் தங்களின் நலனில் அக்கறை காட்டவில்லை என, மாநில, காங்கிரஸ் தலைவர்கள் பலரும், கட்சி மேலிடத்தின் மேல் அதிருப்தியில் உள்ளனர்.
காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, புதுக்கட்சி துவங்கும் முயற்சியில் கிரண்குமார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “தனிக்கட்சி துவங்கி, மக்களின் ஆதரவைப் பெற்று, லோக்சபா, சட்டசபை தேர்தல்களை எதிர்கொண்டு மீண்டும் முதல்வர் பதவியில் அமரும் வரை கிரண்குமார் ஓயமாட்டார்’ என, அவரின் ஆதரவாளர்கள், பலரும் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒய்.எஸ்.ஆர்., – காங்., தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, மாநிலம் முழுவதும் மட்டுமல்லாது, அண்டை மாநிலங்கள் மற்றும் மத்திய அரசியலில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து, ஒருங்கிணைந்த ஆந்திராவிற்கு ஆதரவு திரட்டி வருகிறார். இதன் மூலம் ஆந்திர மக்களின் பார்வை, அவர் பக்கம் திரும்பியுள்ளது.
தவிர, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கானாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதால், கிரண்குமாரும் கட்டாயம் இதே கருத்தை ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பதவிக்காகவும், அரசியல் எதிர்காலத்திற்காகவும், கிரண்குமார், சொந்த கட்சியையே கைகழுவும் முடிவை எடுத்துள்ளது, காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சி அடையச் செய்து உள்ளது.
.