ஏற்காட்டில், புறம்போக்கு நிலத்தில் குடியேற முயன்ற கிராம மக்கள்.

சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுக்காவிற்குட்பட்ட ,அசம்பூர் கிராம புனித தெரேசா பள்ளி அருகில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலம் அங்குள்ள தனியார் எஸ்டேட் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த நிலத்தில் அவர்கள் காப்பி, சவுக்கு மற்றும் மிளகு விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலத்தில் தங்களுக்கு வீடு கட்ட நிலம் வழங்க வேண்டும், என அரசிற்கு கோரிக்கை வைத்திருந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அங்கு குடிசை அமைக்கவும் முற்பட்டனர். அப்போது அவர்களை தடுத்து வருவாய் துறையினர், அந்த நிலம் அரசிற்கு சொந்தமான நிலம் என்றும் அத்து மீறி யாரும் நுழையக்கூடாது என்று போர்டு வைத்தனர்.

இந்நிலையில் தற்போது ஏற்காட்டில் தொடர் மழை பெய்து வருவதால், அந்த நிலத்தில் உள்ள காப்பி செடிகளுக்கு தனியார் எஸ்டேட் நிர்வாகத்தினர் மருந்து அடிப்பது மற்றும் கழை பறிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.

இதனையடுத்து நேற்று அதிகாலை கிராம மக்கள் மீண்டும் அந்த நிலத்தில் சில குடிசைகள் அமைத்து குடியேற முயன்றனர். அப்போது அங்கு வந்த ஆய்வாளர் ஆனந்தன் தலைமயைிலான காவல் துறையினர் கிராம மக்களை தடுத்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அசம்பூர் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். போலீசார் அவரை தடுத்து மீட்டனர்.

பின்னர் அங்கு வந்த வட்டாட்சியர் ரமணி, கிராம மக்கள் ஏற்கனவே நிலம் வேண்டும் என கொடுத்த கோரிக்கை மனு அரசிற்கு அனுப்பபட்டுள்ளது. மலைப்பகுதிகளில் பட்டா வழங்குவதற்கு உள்ள தடை ஆணை தளர்த்தப்பட்டால், மக்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறினார். மேலும் தனியார் எஸ்டேட் நிர்வாகத்தினரும், புறம்போக்கு நிலத்தில் நுழையக்கூடாது எனவும், புறம்போக்கு நிலத்தைய ஒட்டி அவர்களது நிலத்தில் வேலி அமைக்க வேண்டும் என கூறினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நே.நவீன் குமார்

Leave a Reply