“வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையாளரை மதித்தல்” என்பதற்கான தளத்தை பிரதமர் நரேந்திர மோதி நாளை (ஆகஸ்ட் 13) காணொலி காட்சி மூலம்தொடங்கி வைக்கிறார்.

கடந்த ஆண்டுகளில் நேரடி வரிவிதிப்புக்கான மத்திய வாரியம், (சிபிடிடிநேரடி வரிவிதிப்பில் பல முக்கியமான வரிவிதிப்பு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு நிறுவன வரி விகிதங்கள் 30 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதோடு, புதிய உற்பத்தி தொழிற்பிரிவுகளுக்கான வரி விகிதங்கள் 15 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு உள்ளன. ஈவுத்தொகையைப் பகிர்ந்து அளிப்பதன் மீது விதிக்கப்படும் வரி நீக்கப்பட்டு உள்ளது.

வரிவிதிப்பில் சீர்திருத்தம் என்பது வரிவிகிதங்களைக் குறைத்தல் மற்றும் நேரடி வரிவிதிப்பு சட்டங்களை எளிமைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. வருமான வரித்துறை செயல்பாட்டில், திறனையும், வெளிப்படைத் தன்மையையும் கொண்டு வருவதற்கு சிபிடிடி பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்துள்ளது. புதியதாக அறிமுகப்படுத்தி உள்ள ஆவண அடையாள எண் மூலமாக அலுவலகத் தொடர்பியலை மேலும் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்வது என்பதும் இந்த சீர்திருத்தத்தில் உள்ளடங்கும். அதாவது இனி ஒவ்வொரு துறை சார்ந்த தொடர்பு நடவடிக்கையிலும், கணினி மூலம் உருவாக்கப்படும் பிரத்யேக ஆவண அடையாள எண் குறிப்பிடப்படும்.

மேலும், வரி செலுத்துவோருக்கு வரி செலுத்தும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், வருமான வரித்துறையானது வரி செலுத்தும் தனி நபர்கள் வசதியாக வருமானவரி தாக்கல் படிவங்களை முன்கூட்டியே நிரப்பித் தரும் நடவடிக்கையை எடுத்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஏற்று நடக்க வேண்டிய வரிவிதிப்பு விதிகளும் எளிமையாக்கப்பட்டு உள்ளன.

நிலுவையில் உள்ள வரிப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதைக் கருத்தில் கொண்டு வருமானவரித் துறை ”விவாத் செ விஷ்வாஸ் சட்டம் 2020” என்ற நேரடி வரி விதிப்பு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் தற்போது பிரச்சனைகளை பைசல் செய்வதற்கான சுயபிரகடனங்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. வரி செலுத்துவோரின் குறைகள் / புகார்களைத் திறம்பட குறைப்பதற்காக, பல்வேறு மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் துறைசார் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான நிதி வரம்பு உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும், டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மற்றும் மின்னணு முறையில் பணம் செலுத்துதல் ஆகியவற்றை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இத்தகைய நடவடிக்கைகளை மேலும் முன்னெடுத்துச் செல்ல வருமான வரித்துறை முனைந்துள்ளது. கோவிட் நெருக்கடி காலகட்டத்தின் போது வரிசெலுத்துவோர் வரி செலுத்துவதை எளிமைப்படுத்த வரித்தாக்கலுக்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் வரி செலுத்துவோரிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் வருமான வரித்துறை செலுத்திய வரிப்பணத்தில் திருப்பித் தர வேண்டிய தொகையை விரைவாக திருப்பித் தந்துள்ளது.

வெளிப்படையான வரி விதிப்பு – நேர்மையாளரை மதித்தல்” என்பதற்கான தளத்தை பிரதமர் தொடங்கி வைக்க இருப்பது என்பது, நேரடி வரி விதிப்பு சீர்திருத்தங்களை மேலும் முன்னெடுத்துச் செல்லும்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வர்த்தக சபைகள், வர்த்தகக் கழகங்கள், சார்ட்டர்டு அக்கவுண்ட்டுகளின் சங்கங்கள் மற்றும் முக்கியமான வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித் துறையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொள்வார்கள். இதில் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply