எதிர்க்கட்சித் தலைவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, சந்திரபாபு நாயுடு கடிதம்.

எதிர்க்கட்சித் தலைவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் தொலைபேசிகளை, ஆந்திர மாநில அரசு ஒட்டுக்கேட்பதாகவும், இந்த பிரச்சனையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரியும், பிரதமர் நரேந்திர மோதிக்கு, ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.

ஆந்திராவில் ஜெகன் மோகன் தலைமையிலான அரசின் கீழ் மக்கள் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றனர். ஜெகன் மோகன் முதல்வரானதில் இருந்து, ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.

முதலில் முந்தைய ஆட்சியில் முதலீடு செய்த முதலீட்டாளர்களையும், கொள்கைகளையும் தாக்கியதன் மூலம் ஆட்சி முற்றிலும் தடம்புரள துவங்கிவிட்டது. இதைத் தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் மற்றும் ஆந்திர பொது சேவை ஆணையம் போன்ற நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தொலைபேசிகளை சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்கும் நடவடிக்கையில் ஆளும் கட்சி ஈடுபட்டு வருகிறது.

தொலைபேசி ஒட்டுக்கேட்பு என்பது ஜனநாயகத்திற்கும், தேசிய பாதுகாப்பிற்கும், இந்தியாவின் இறையாண்மைக்கும் மற்றும் நட்பு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தால் மட்டுமே செய்ய வேண்டும்.
தொலைபேசி ஒட்டுக்கேட்பு என்பது தனிநபர்களின் உரிமையை பறிப்பது மட்டுமல்லாமல், உயர் பதவியில் இருப்போருக்கு அச்சுறுத்தலாகவும், மிரட்டல் விடுப்பதற்கும் வாய்ப்பாக அமையும்.

ஆந்திராவில் ஆளும் கட்சி மற்றும் தனியார் நிறுவனங்கள் செய்து வரும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தி, உடனடியாக கடுமையான நடவடிக்கை துவங்க வேண்டும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Dr.DURAI BENJAMIN
ullatchithagaval@gmail.com

Leave a Reply