வாசகரின் கேள்வி:
மத்திய அரசையும், பா.ஜ.க. தலைமையையும்,பா.ஜ.க.-வின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி பகிரங்கமாக மிரட்டியும், விமர்சித்தும் வருகிறாரே? அவருக்கும் மட்டும் இந்த துணிச்சல் எங்கிருந்து வருகிறது?-இதுப்பற்றி உங்கள் கருத்து என்ன?
-என்.அய்யப்பன்., சோழிங்கநல்லூர், சென்னை.
ஆசிரியரின் பதில்:
இது துணிச்சலும் இல்ல, ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல; சுப்பிரமணியன் சுவாமிக்கு ஏற்பட்டிருக்கும் உச்ச கட்ட விரக்தி. ஆம், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் (அல்லது) மத்திய நிதி அமைச்சர் இதில் ஏதாவது ஒரு பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்பது சுப்பிரமணியன் சுவாமியின் பேராசை மட்டுமல்ல, அது அவரது நீண்ட நாளைய கனவு. அதற்காகதான் அவர் பாரதிய ஜனதாக் கட்சியிலேயே 2013 ஆம் ஆண்டு இணைந்தார். அதற்காக இளவு காத்த கிளிபோல காத்தும் கிடந்தார்.
ஆனால், மத்திய நிதி அமைச்சர் பதவி, பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், உச்ச நீதி மன்ற வழக்கறிஞருமான அருண் ஜேட்லிக்கு வழங்கப்பட்டது.
மத்திய நிதி அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் இருந்த சுப்பிரமணியன் சுவாமி, அருண் ஜேட்லியை வெளிப்படையாகவே விமர்ச்சித்தும் வந்தார்.
மேலும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட அப்போது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக (04 செப்டம்பர் 2013 முதல் 04 செப்டம்பர் 2016 வரை) பதவியில் இருந்த ரகுராம் கோவிந்தராஜன் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை சுப்ரமணியன் சுவாமி வாரி இறைத்தார்.
இதற்கிடையில், இவரது தொல்லை தாங்க முடியாமல், பா.ஜ.க. சார்பில் இவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. ஏப்ரல் 26, 2016 முதல் சுப்ரமணியன் சுவாமி மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து ரகுராம் கோவிந்தராஜன் விலகினால், அந்த பதவி தனக்கு கிடைக்கும் என்று சுப்ரமணியன் சுவாமி மிகவும் ஆவலோடு காத்திருந்தார். ஆனால், அதன் பிறகு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவி உர்சித் படேல் என்பவருக்கு வழங்கப்பட்டது. 04,செப்டம்பர் 2016 முதல் 10, டிசம்பர் 2018 வரை அப்பதவியில் உர்சித் படேல் நீடித்தார்.
இதற்கிடையில், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுக்காரணமாக அருண் ஜெட்லி 14, மே 2018 –ல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த காலக்கட்டத்திலாவது மத்திய நிதியமைச்சர் பதவி தனக்கு கிடைக்கும் என்று சுப்ரமணியன் சுவாமி ஏங்கி தவித்தார். அப்போதும் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. 26, மே 2014 முதல் 30, மே 2019 வரை அருண் ஜேட்லிதான் மத்திய நிதி அமைச்சராக இருந்தார்.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகாந்த தாஸ் 11, டிசம்பர் 2018 அன்று நியமிக்கப்பட்டு, இன்று வரை அவர்தான் அப்பதவியில் இருந்து வருகிறார்.
இதனால் வெறுப்படைந்த சுப்ரமணியன் சுவாமி 2019 மக்களவை தேர்தல் முடியும் வரை காத்து கிடந்தார்.
இந்நிலையில், 2019 மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிப் பெற்று மீண்டும் நரேந்திர மோதி தலைமையில் ஆட்சி அமைந்தது. நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுக்காரணமாக அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்த காரணத்தால், இந்த முறை மத்திய நிதி அமைச்சர் பதவியை கைப்பற்றிவிட வேண்டும் என்று பல வழிகளில் சுப்ரமணியன் சுவாமி முயற்சித்தார். பிரதமரிடமும், பிரதமருக்கு நெருக்கமானவர்களிடமும் கெஞ்சி கூத்தாடிப் பார்த்தார். இவரை யாரும் நம்பத் தயாராக இல்லை.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் 31, மே 2019 அன்று பதவியேற்றார். இதைக் கண்டு அதிர்ச்சிடைந்த சுப்ரமணியன் சுவாமி, விரக்தியின் உச்சத்திற்கே சென்றார்.
தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலமும் கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகள் உருண்டோடி விட்டது. இதற்கு பிறகும் பாரதிய ஜனதா கட்சியை நம்பி பயனில்லை என்ற முடிவுக்கு, சுப்ரமணியன் சுவாமி வந்ததின் விளைவுதான் இந்த புலம்பல்.
கடந்த 6 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோதி, நம் நாட்டிற்கு செய்த மிகப் பெரிய நல்ல காரியம் என்ன தெரியுமா?! இந்த சர்வதேச தரகர் சுப்ரமணியன் சுவாமியை, மத்திய அமைச்சரவையில் அனுமதிக்காமல் இருந்ததுதான். இந்த ஒரு காரணத்திற்காகவே, பிரதமர் நரேந்திர மோதியை நிச்சயம் பாராட்டிதான் ஆக வேண்டும்.
கொரோனா பரவல் தடுப்பு பொது முடக்கத்தால் வெளிநாடு செல்ல முடியாமல் சுப்ரமணியன் சுவாமி தற்போது தவித்து வருகிறார். சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கி விட்டால், இவர் உடனே வெளிநாடு பறந்து விடுவார். அங்கிருந்தப்படியே மத்திய அரசுக்கு எதிராக தமது வழக்கமான கிரிமினல் புத்தியை காட்டத் துவங்குவார்.
வேலிக்கு தேடிய முள்; பாரதிய ஜனதா கட்சியின் காலுக்கு வினையாக இப்போது மாறியுள்ளது.
மேலும், உங்கள் கேள்வியில் சுப்ரமணியன் சுவாமி பா.ஜ.க.-வின் மூத்த தலைவர்?! என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அவரது 80 வயதை கணக்கிட்டு குறிப்பிட்டுள்ளீர்களா? இல்லை, பா.ஜ.க.-வில் அவர் இணைந்த 2013 ஆண்டை கணக்கிட்டு குறிப்பிட்டுள்ளீர்களா? என்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் அவரின் நடத்தை, அவரது நடவடிக்கை, அவரின் செய்கை ஆகியவற்றை பார்க்கும்போது, “மூத்த தலைவர்” என்ற வார்த்தை, அவருக்கு எந்த வகையிலும் பொருந்தாது. பா.ஜ.க.-விற்கு ஆதரவாகவும், விசுவாசமாகவும் அவர் ஒரு நாள் கூட இருந்ததில்லை. இனியும் அவர் இருக்க போவதும் இல்லை. சுப்ரமணியன் சுவாமி பெரிய மனிதர், ஆனால் சின்னப் புத்தி.
ஏற்றுக் கொண்ட கொள்கை நல்லதோ, கெட்டதோ!- ஆனால் , அதற்கு கடைசி வரை விசுவாசமாக யார் இருக்கிறார்களோ அவர்கள்தான் கொள்கைவாதிகள்! கொள்கைவாதி, தான் சார்ந்திருக்கும் தலைமையை, வெளிப்படையாக பாராட்டுவான்; புகழ்ந்து பேசுவான்; எந்த நிலையிலும், எந்த வகையிலும், யாரிடமும் தன் தலைமையை விட்டுக் கொடுக்கமாட்டான். ஆனால், தலைமை தவறு செய்யும்பட்சத்தில் அவற்றை இரகசியமாக சுட்டிக்காட்டுவான்; கண்டிப்பான்; அதை திருத்த நினைப்பான். கொள்கைவாதி எப்போதும் நல்லது, கெட்டதை மட்டும்தான் பார்ப்பான். ஆனால், வியாபாரி லாபம், நஷ்டத்தை மட்டும்தான் பார்ப்பான். அந்த வகையில் பார்க்கும்போது சுப்ரமணியன் சுவாமி ஒரு நல்ல வியாபாரி. இதை நான் சொல்லிதான் இங்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
சுப்பிரமணியன் சுவாமிக்கு இயற்கையாகவே ஒரு பிறவி குணம் உண்டு. “கல்யாண வீட்டிற்கு சென்றால், தானே மாப்பிள்ளையாக இருக்க வேண்டும்; இழவு வீட்டிற்கு சென்றால், தானே பிணமாக இருக்க வேண்டும்”- அப்போதுதானே மாலை மரியாதையெல்லாம் தனக்கே கிடைக்கும். அந்த வாய்ப்பு பா.ஜ.க-வில் தனக்கு கிடைக்க வில்லையென்பதால் சுப்பிரமணியன் சுவாமி வாய்க்கு வந்தபடி தற்போது விமர்சிக்க தொடங்கிவிட்டார்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைப்பெற்ற போது, இதே சுப்பிரமணியன் சுவாமி தான் இலங்கையில் நடைப்பெற்ற அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்றார். இலங்கை இராணுவக் கருத்தரங்கிலும் கலந்து கொண்டு இந்தியாவின் சார்பில் உரையாற்றினார்.
மேலும், சென்னை சூளைமேடு பகுதியில் 1986 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில், ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் , தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவை, சர்வ சாதாரணமாக சர்வதேசப் புரோக்கர் சுப்ரமணிய சுவாமி 09.08.2012 அன்று நேரில் சந்தித்து பேசினார்.
2014 முதல் 2019 வரை பாரதிய ஜனதா ஆட்சியிலும் கிட்டத்தட்ட இந்தியாவின் அதிகாரப்பூர்வ பிரதமரைப் போன்றே, இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு வாக்குறுதிகளை சுப்பிரமணியன் சுவாமி அளித்து வந்தார்.
அப்படியானால், இந்த சுப்பிரமணியன் சுவாமி யார்? இந்திய அரசால் நியமிக்கப்பட்ட அரசு தூதுவரா? (அல்லது) இந்திய அரசால் நியமிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளரா? (அல்லது) இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட புரோக்கரா? இவருக்கு இந்திய அரசாங்கம் என்ன அதிகாரம் அளித்துள்ளது?
அனைத்து அதிகாரங்களையும் தன் வசம் வைத்திருக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோதியே அமைதியாக இருக்கும் போது, ஒட்டு மொத்த இந்தியாவும் தன் கையிலதான் இருக்கிறது என்ற தோற்றத்தை இந்த சுப்பிரமணியன் சுவாமி, உலக தலைவர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார். இது இந்திய ஆட்சியாளர்களையும், ஒட்டு மொத்த இந்திய மக்களையும் அவமதிக்கும் செயல்.
இப்படி இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் சுப்பிரமணியன் சுவாமியை, தேச துரோகத் தடை சட்டத்தின் கீழ் இந்திய அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும். மக்கள் வரி பணத்தில் இவருக்கு வழங்கப்பட்டு வரும் அதிஉயர் பாதுகாப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இவர் உலக நாடுகள் அனைத்திற்கும் உல்லாசமாக சென்று வருவதற்கு இவருக்கு பணம் எங்கிருந்து வருகிறது?! இவருடைய வருமானம் என்ன?! உலக நாடுகளில் இவருக்கு இருக்கும் இரகசிய தொடர்புகள் என்ன, என்ன? என்ற விவரங்களை, தேச நலன் கருதி உடனடியாக புலன் விசாரணை செய்து இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
வணக்கத்திற்குரிய வாசகர்களுக்கு, ஒரு அன்பான வேண்டுகோள்..!
“கேள்விக்கு என்ன பதில்? “-என்ற தலைப்பில், நமது வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, ஊடகத்துறையில் 34 ஆண்டுகளுக்கு மேல் அனுபம் பெற்ற, நாட்டு மக்களின் நாடித்துடிப்பை நன்கு உணர்ந்த, நமது “உள்ளாட்சித்தகவல்” ஆசிரியர், டாக்டர்.துரைபெஞ்சமின் அவர்கள், வெளிப்படையாகவும், உண்மையாகவும் பதில் அளிக்க இருக்கிறார். எனவே, மக்களின் மனநிலையை பிரதிபளிக்கும் வகையில், கருத்து ஆழமிக்க கேள்விகளை, கீழ்காணும் மின்னஞ்சல் ullatchithagaval@gmail.com (அல்லது) வாட்ஸ் அப் 9842414040 எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு, அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். வாசகர்கள் விரும்பினால் அவர்களின் படத்தையும் வெளியிடத் தயாராக உள்ளோம்.
-UTL MEDIA TEAM.