உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டம், சந்த்பா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், செப்டம்பர் 14-ஆம் தேதி பட்டியலினப் பெண் ஒருவர், நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் அவசர, அவசரமாக இரவோடு, இரவாக காவல்துறையினரால் தகனம் செய்யப்பட்டது. உறவினர்கள் இல்லாமல் காவல்துறையினர் தகனத்தை நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இச்சம்பவம் தொடர்பாக சந்த்பா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு (குற்ற எண்: 136/2020) செய்யப்பட்டுள்ளது.
இளம்பெண் கொலை விவகாரத்தில் நாடு முழுவதும் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் போராட்டங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருவதால், இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுத்துவந்தது. இக்கோரிக்கையை உத்தரபிரதேச மாநில அரசும் மற்றும் மத்திய அரசும் ஏற்றுக்கொண்டு, இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், மத்திய புலனாய்வுப் பிரிவு (Central Bureau of Investigation-CBI) குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்து, வழக்கின் விசாரணையை இன்று (11.10.2020) கையகப்படுத்தியுள்ளது.
ஹத்ராஸ் இளம்பெண் கொலை விவகாரத்தில் சாதி மற்றும் அரசியல் உட்புகுந்து விட்டது. எனவே, இதில் மறைந்திருக்கும் மர்மங்களை மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை அதிகாரிகள்தான் வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com