பேசித் தீர்க்கலாம் வாங்க…!-மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் ஹெச்.எம்.ஜெயராம் தலைமையில், திருவெறும்பூரில் நடைப்பெற்ற ‘மனு விசாரணை சிறப்பு முகாமில்’ 43 மனுக்களில் 37 மனுக்களுக்கு சமரசத் தீர்வு கிடைத்தது.

திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டல காவல் துறையின் தலைவராக ஹெச்.எம்.ஜெயராம் செயல்பட்டு வருகிறார்.

இவர் இந்த ஆண்டு ஜூலை 2-ந்தேதி மத்திய மண்டல காவல் துறையின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டபோது, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும், கீழ்காணும் ஆலோசனைகளை அதிரடி உத்தரவாக பிறப்பித்து இருந்தார்.

“மத்திய மண்டல மாவட்டங்களில் காவல் துறையினர் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டி, குற்ற நடவடிக்கைகளை உடனடியாக தடுக்க வேண்டும். கொரோனா பரவலைத் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை சிறந்த முறையில் அமல்படுத்த வேண்டும். சாலை விபத்துகளைத் தடுக்க முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும். காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களை மிகவும் கண்ணியமான முறையில் நடத்த வேண்டும். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். பொதுமக்கள், வணிகர்கள் உட்பட அனைத்துத் தரப்பினருடனும் நல்லுறவைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளை நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சிறையில் அடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

பதவியேற்கும்போது எல்லா உயர் அதிகாரிகளும் இதுப்போன்று சொல்வது வழக்கமான ஒன்றுதான் என்று அனைவரும் கடந்து சென்ற நிலையில், திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா மூலம் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளையும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகளையும் மேற்கொண்டு வந்தார். ஆனாலும், இது ஒரு சவாலானப் பணியாகதான் அவருக்கு இன்றுவரை இருந்து வருகிறது. இருந்தாலும், இந்த முயற்சியை விடாமல் இவர் இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்பது உண்மையிலுமே ஆறுதலாக இருக்கிறது.

இந்நிலையில், திருவெறும்பூர் உட்கோட்ட காவல் நிலைய பொதுமக்களின் மனு விசாரணை சிறப்பு முகாம், மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் ஹெச்.எம்.ஜெயராம் தலைமையில், திருவெறும்பூர் மகளிர் காவல் நிலைய வளாகத்தில் இன்று (08.11.2020)நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில், திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா, திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) செந்தில் குமார், திருவெறும்பூர் காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் சுரேஸ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவாக திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானவேலன் நன்றி கூறினார். காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டனர்.

இம்முகாமில் நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள மனுக்களை உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்களின் மனுக்களுக்கு எளிதில் தீர்வு காணும் வழிமுறைகளும் ஏற்படுத்தப்பட்டது. புகார்தாரர்கள் அளித்திருந்த மொத்தம் 43 மனுக்களில் 37 மனுக்களுக்கு இந்நிகழ்ச்சி மூலம் இன்று சமரசத் தீர்வு கிடைத்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற மனு விசாரணை சிறப்பு முகாம்களை, உயர் அதிகாரிகளின் முன்னிலையில், நாடு முழுவதும் தினம்தோறும் நடத்தினால், பொதுமக்களிடம் இருந்து வரும் தேவையில்லாத பகை உணர்ச்சியும், உறவினர்களுக்குள் ஏற்படும் குடும்ப வன்முறையும் பெருமளவில் குறைந்து விடும். மேலும், நீதிமன்றங்களில் குவிந்து வரும் தேவையில்லாத சில்லறை வழக்குகளையும், அதனால் நீதித்துறைக்கு ஏற்படும் கால விரயத்தையும் நிச்சயமாக கட்டுப்படுத்தலாம்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

படங்கள்: ஆர்.சிராசுதீன்.

Leave a Reply