திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்தவர் கே.பி.ராமலிங்கம், பழைய அ.தி.மு.க.காரர், திமுகவில் அழகிரி ஆதரவாளர், லோக்சபா-ராஜ்யசபா முன்னாள் எம்.பி, திமுக விவசாய அணி மாநில செயலாளராக இருந்தவர்.

கீழ்காணும் அறிக்கைக்காக 02.04.2020 அன்று திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

“கொரோனா’ வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற, பிரதமரும், முதல்வரும் சிறப்பாக செயல்படுகின்றனர். இன்றைய சூழலில் மக்கள் நலன் கருதி, வேளாண் பணிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்திருப்பது, முதல்வரின் ஆளுமை திறனை காட்டுகிறது. அனைத்து தமிழக விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டுகிறோம். இந்த இக்கட்டான கட்டத்தில் கலெக்டர்கள், உயரதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆலோசனையோடு அரசு செயல்படுவதுதான் சிறந்த வழிமுறை. அதைவிடுத்து வீடியோ கான்பரன்சில் அனைத்து கட்சி தலைவர்களோடு ஆலோசிக்க வேண்டும் என்ற கோரிக்கை அவசியமற்றதாக கருதுகிறேன். அவசியமான, அத்தியாவசியமான கருத்து இருந்தால், கட்சித் தலைவர்கள் மின்னஞ்சலில் முதல்வருக்கு அனுப்பலாம். அதை விடுத்து ஆலோசனை கூட்டம் நடத்தினால், ஒவ்வொரு தலைவர்களும் பேசி முடிப்பதற்குள், இத்தாலிபோல் இந்தியாவும் பாதுகாப்பற்ற நாடாக மாறிவிடும் அபாயம் உள்ளது. ‘144’ தடை என்றால் அரசியல் நடவடிக்கைகளுக்கும் தடைதான். ஆகவே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தக் கூடாது”

இவ்வாறு கே.பி.ராமலிங்கம் தமது அறிக்கையில் தெரிவித்து இருந்தார். இதற்காகதான் இவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் இன்று (21.11.2020) காலை சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் மாநிலத் தலைவர் எல். முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

–சி.கார்த்திகேயன், எஸ்.திவ்யா.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply