கொரோனா நோய் பரவல் தடுப்பு பொது முடக்கத்தின் காரணமாக, அப்பாவிப் பொதுமக்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் சுயத் தொழில் முனைவோர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் மிகப் பெரிய சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அதிலிருந்து மீளமுடியாமல் இன்று வரை தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தாண்டு மார்ச் மாதம் முதல் ஆறு மாதங்களுக்கு வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு கடன் தவணை செலுத்துவதில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி சலுகை வழங்கியது. சலுகை வழங்கப்பட்ட இந்த ஆறு மாதங்களுக்கு வட்டிக்கு, வட்டி வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி வங்கிகளும் வசூலிக்க தொடங்கின.
இதை எதிர்த்து கஜேந்திர சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சலுகை வழங்கப்பட்ட ஆறு மாதங்களுக்கு வட்டியை தள்ளுபடி செய்யவேண்டும்; மேலும், வட்டிக்கு வட்டி வசூலிக்கக் கூடாது எனவும் அம்மனுவில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இத்துடன் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் சார்பிலும் இதற்கு நிவாரணம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி, முகேஷ்குமார் ரசிக்பாய் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில், ரூ.2 கோடி வரையிலான கடன்களின் ஆறு மாத தவணை காலத்திற்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்பட மாட்டாது; அதை மத்திய அரசே செலுத்தும் என மத்திய அரசு தெரிவித்தது. மேலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கும் பல்வேறு ஊக்கச் சலுகை திட்டங்களை அமல்படுத்தி வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.
நேற்று (27.11.2020) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. கொரோனாவால் மக்களின் ஆரோக்கியம் மட்டுமின்றி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், வளர்ச்சி மந்தமாகவே உள்ளது.
(i) MSME loans-குறு, சிறு, நடுத்தர நிறுவனங்ளின் கடன்கள்
(ii) Education loans- கல்வி கடன்கள்
(iii) Housing loans- வீட்டு கடன்கள்
(iv) Consumer durable loans- நுகர்வோர் நீடித்த கடன்கள்
(v) Credit card dues- கடன் அட்டை நிலுவைத் தொகை
(vi) Automobile loans- வாகன கடன்கள்
(vii) Personal loans to professionals-தனிநபர், தொழில் வல்லுநர்களின் கடன்கள்
(viii) Consumption loans- நுகர்வு கடன்கள்
மேற்காணும் எட்டு துறைகளுக்கு மத்திய அரசு உறுதி அளித்தபடி தேசிய பேரிடர் நிவாரண சட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புரையின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
11127_2020_34_1_24859_Judgement_27-Nov-2020
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com