அதிமுகவின் தொண்டனாக இருப்பதையே நான் பெருமையாக கருதுகிறேன்!- தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் கே.பழனிசாமி பேச்சு.

சென்னையில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டத்தில், அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் உரையாற்றினர்.

ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், அதிமுக தேர்தல் பணிகளை தொடக்கி வைக்கும் மாபெரும் பிரசார தொடக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்த ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொதுக்கூட்ட மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் உருவ படத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தொடக்க ஊரையாற்றிய மீன்வளத்துறைஅமைச்சர் ஜெயக்குமார், அதிமுக அரசு நிறைவேற்றியுள்ள பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார். உலகத்திலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சி என்றும், ஊழலில் திளைத்த இயக்கம் தி.மு.க. என்றும் அமைச்சர் விமர்சித்தார்.

தமிழக வரலாற்றிலேயே 9 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுக தான். 9 ஆண்டுகள் ஆட்சி செய்து அனைத்து துறைகளிலும் சிறப்பான சாதனை படைத்துள்ளோம். அம்மா (ஜெ.ஜெயலலிதா) மறைந்த பிறகும் சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகிறோம். அதிமுக.,வை சில புல்லுருவிகள் வீழ்த்த சதி செய்கின்றனர். அதிமுக.,வை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள். ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள ஒரே கட்சி அதிமுக தான். நான் அதிமுக.,வின் தொண்டனாக இருப்பதையே பெருமையாக கருதுகிறேன். கட்சிக்கும், தலைமைக்கும் விஸ்வாசமுள்ளவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு இல்லம் தேடி பதவி வரும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

ஏழை பிள்ளைகளின் பசியை போக்க சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தவர் எம்ஜிஆர். அம்மா (ஜெயலலிதா) வழியில் அதிமுக சிறப்பான ஆட்சி செய்து வருகிறது. அதிமுக.,வில் சாதாரண தொண்டராக இருப்பது கூட பெருமைக்குரியது . இந்தியாவில் அனைத்து மாநிலத்திற்கும் தமிழகம் எடுத்துக்காட்டாக உள்ளது. மக்களுக்கு தேவையானதை உணர்பூர்வமாக சிந்தித்து செயல்படுத்தும் அரசாக தமிழக அரசு உள்ளது. 2023ம் ஆண்டுக்குள் ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தரப்படும். இவ்வாறு ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

எஸ்.திவ்யா.

Leave a Reply