மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்!- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல் திருமாவளவன் அறிக்கை.

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்குரிய தலைவர் பதவிக்கான நியமனத்தில் பெருமளவில் சட்டமீறல்கள் நடந்துவருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பதவிக்குத் தகுதியானவரை வெளிப்படைத்தன்மையுடன் நியமனம் செய்யவேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லாமலும், தமக்கு வேண்டிய நபரை அப்பதவியில் அமர்த்த அவசர ஆயத்தங்கள் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அது மட்டுமில்லாமல் முறைகேடான நியமனத்தை எதிர்த்து நீதிமன்றம் மூலம் தடையாணை பெறுவதைத் தவிர்க்கும் வகையில், தந்திரமாக உயர்நீதிமன்றத்தின் விடுமுறை நாட்களில் நியமனம் செய்திட முயற்சிப்பதாகவும் தெரிகிறது.

அதாவது,23-12-2020-ல் இருந்து 04-01- 2021 வரை விடுமுறை நாட்கள் என்பதால், அதைப் பயன்படுத்தி, மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நியமனத்தை சட்டத்திற்குப் புறம்பாக செய்துவிடலாம் என அதிமுக அரசு திட்டமிடுவதாகக் கருதப்படுகிறது. அத்தகைய சதிமுயற்சிகள் இருப்பின் அதனைக் கைவிட வேண்டுமாறு வலியுறுத்துகிறோம்.

இதேபோன்ற சூழ்நிலையில் தான் இதற்கு முன்பு ‘லோக் அயுக்தா’ தலைவர் பதவிக்கும் சட்டத்துக்குப் புறம்பாகத் தலைவர் நியமனம் செய்யப்பட்டு, அது தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மனித உரிமைகள் சட்டப்பிரிவு “22(1)-ன் படி, ஆளுநர் அவர்கள் மாநில ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வுக்குழுவின் பரிந்துரையின் படி நியமனம் செய்கிறார், மேற்படி சட்டத்தின் பிரிவு “22(1)(a) ன் படி தேர்வுக்குழுவில் மாநில முதலமைச்சர் தலைவராகவும், சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்படி தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை அவசியம். ஆனால்,
தமிழக அரசின் அணுகுமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லையென குற்றஞ்சாட்டி அண்மையில் நடந்த தேர்வுக்குழு கூட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் புறக்கணித்துள்ளார். இந்த எதிர்ப்பையும் மீறி நியமனம் செய்ய அரசு முயற்சிக்கிறது என்னும் அய்யம் எழுந்துள்ளது.

எனவே, இந்த தேர்வுக்குழு வெளிப்படைத் தன்மையைக் கருத்தில் கொண்டு, மனித உரிமை ஆணையத் தலைவராகப் பணிபுரிய விருப்பமுள்ள அனைவருக்கும் அதில் பங்கேற்பதற்கு வாய்ப்பு வழங்கி, உயர்நீதிமன்றத்தில் மிகச்சிறப்பாக பணிபுரிந்த, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரைப் பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மனித உரிமைகளைக் காக்க வேண்டிய ஆணையத்தின் தலைவர் நியமனத்திலேயே உரிமைப் பறிப்பு நிகழ்வதற்கு அனுமதிக்கக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல் திருமாவளவன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply