சசிகலாவின் வருகையும்!-தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமின் உறுதியும்!-அதிமுகவில் நடக்கும் அதிகாரப் போட்டி.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த வி.கே. சசிகலா, கடந்த ஜனவரி 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையானார். விடுதலையாகும் நாளில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் இருந்த சசிகலா, மருத்துவமனையிலிருந்து வெளியேறும்போது, மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பயன்படுத்திய காரை சசிகலா பயன்படுத்தியதோடு, அந்த காரில் அஇஅதிமுக கட்சி கொடியும் கட்டப்பட்டிருந்தது. இதற்கு அஇஅதிமுக தரப்பில் இருந்து விமர்சனம் எழுந்தது.

தற்போது பெங்களூரில் ஓய்வு எடுத்து வரும் சசிகலா, அங்கிருந்தப்படியே தனது அரசியல் நகர்வுகளைத் தொடங்கியிருக்கிறார்.

இந்நிலையில், பிப்ரவரி 08-ந் தேதி தமிழகம் வரும் சசிகலாவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்து, திருவிழாவைப் போல கொண்டாட தயாராகி வருகிறோம் என்று டிடிவி.தினகரன் இன்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தமிழகம் வரும் சசிகலாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ அனுமதி வழங்க வேண்டும் என்று, குடியாத்தம் தொகுதி முன்னாள் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் ஜெயந்தி பத்மநாபன் என்ற பெண்மணி, வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்துள்ளார்.

சிறையில் இருந்து விடுதலையாகி பிப்ரவரி 08-ந் தேதி தமிழகம் வரும் சசிகலாவால், அஇஅதிமுகவில் எந்த சலனமும், பிளவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி இன்று வரை உறுதியாக இருந்து வருகிறார். அதற்கு ஏற்றார்போல் அஇஅதிமுக முக்கிய நிர்வாகிகளின் நடவடிக்கைகள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில். காரில் அஇஅதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியதற்கு எதிராக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் (Director General of Police-DGP) அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் இன்று மாலை புகாரளித்தனர்.

அஇஅதிமுகவில் உள்ள உறுப்பினர்கள் 5 வருடங்களுக்கு ஒரு முறை கட்சி உறுப்பினராக தங்களை புதுப்பிப்பது கட்டாயமாகும். அந்த வகையில் சசிகலா தன்னை உறுப்பினராக புதுப்பிக்கவில்லை. அஇஅதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா, எப்படி அஇஅதிமுக கட்சிக் கொடியை பயன்படுத்த முடியும்?! இது சட்டத்திற்குப் புறம்பானது.

அஇஅதிமுக தொண்டர்கள், தலைவர்களை தவிர, மாற்றுக்கட்சியில் இருப்பவர்கள் அஇஅதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது. அஇஅதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த எந்த தார்மீக உரிமையும் இல்லை.

எனவே, அஇஅதிமுக கொடியை சசிகலா இனி பயன்படுத்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்துள்ளனர்.

சசிகலா தமிழகத்தில் கால் வைப்பதற்கு முன்பாகவே, இங்கு பிரச்சனை உருவாகிவிட்டது. அவர் வந்த பிறகு இங்கு என்ன, என்ன கூத்து நடக்குமோ?!

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply