நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன பணியிடங்களுக்கு நடைபெற்ற Graduate Executive Trainee தேர்வில் தமிழக இளைஞர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது!-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.

File Photos.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி) GET (Graduate Executive Trainee) பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில், வெளிமாநில தேர்வு மையங்களில் எழுதியவர்களில் 99 சதவீதம் பேர் தேர்வு பெற்றுள்ள நிலையில், தமிழகத் தேர்வு மையங்களில் எழுதியவர்களில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே தேர்வு பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த பாரபட்சமான தேர்வு முறைக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாகத் தேர்வு பெற்றுள்ள 1582 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெறும் 8 பேர் மட்டுமே என்பது வெளி மாநிலத் தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வின் நம்பகத்தன்மை மீது மிகப்பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

என்.எல்.சி.யில் அப்ரென்டீஸ் பயிற்சி முடித்தவர்கள், இறந்தோர் வாரிசுகள், என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு நிலம் கொடுத்தவர்கள் என ஆயிரக்கணக்கான பேருக்கு இன்னும் வேலை வாய்ப்புகள் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளையும் வெளிமாநிலத்தில் உள்ளவர்களுக்குத் தாரைவார்க்கும் மத்திய பா.ஜ.க. அரசின் போக்கு மிகுந்த வருத்தத்திற்குரியது.

வட மாநிலத்தவருக்கே ஒப்பந்தப் பணிகள் வழங்கப்படுவதால், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒப்பந்தத் தொழிலாளர் பணிகள் கிடைப்பதும் அரிதாகி வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், இதுபோன்ற தேர்வுகள் மூலமும் அநீதி இழைக்கப்படுகிறது.

இது பற்றி பத்தாண்டுக் கால அ.தி.மு.க. அரசு, குறிப்பாக இந்த நான்காண்டு காலத்தில் உள்ள முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசு தமிழக இளைஞர்களுக்கு வேலை இழப்பு திட்டமிட்டு ஏற்படுத்தப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

எனவே, என்.எல்.சி.யில் நடைபெற்றுள்ள இந்த GET (Graduate Executive Trainee) தேர்வை உடனடியாக ரத்து செய்து, வெளிமாநிலத் தேர்வு மையங்களில் நடைபெற்றுள்ள தேர்வில் 99 சதவீதம் வெளிமாநிலத்தவரே தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள என்.எல்.சி உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கே வேலைவாய்ப்புக் கிடைத்திடுவதை மத்திய பா.ஜ.க. அரசு உறுதி செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

முதலமைச்சர் பழனிசாமி இது தொடர்பாக உடனடியாக மத்திய அரசுடன் பேசி, மேற்கண்ட தேர்வை ரத்து செய்து, தமிழகத்திலேயே தேர்வு மையங்களை அமைத்து அந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்திட வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைத் திட்டமிட்டுப் பறித்துள்ள இந்தத் தேர்வு ரத்து செய்யப்படவில்லையென்றால், ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் போராட்டம் விரைவில் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

-சி.கார்த்திகேயன்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் GET (Graduate Executive Trainee) பணியிடங்களுக்கு தனிப்பட்ட நேர்காணலுக்காக தேர்வு பெற்றுள்ள நபர்களின் பெயர் பட்டியல் விபரங்களை, நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

CBT-Result-Cut-Off-Marks

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply