‘நியூஸ் கிளிக்’ ஊடக அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் சோதனை!- பல்வேறு ஊடக மற்றும் அரசியல், சமூக அமைப்புகள் கண்டனம்.

Editor-in-chief Prabir Purkayastha.

‘நியூஸ் கிளிக்’ ஊடக அலுவலகம்.

‘நியூஸ் கிளிக்’ ஊடக அலுவலகம்.

பிப்ரவரி 9 ஆம் தேதி காலையில், அமலாக்க இயக்குநரகம் (ED) அதிகாரிகள், நியூஸ் கிளிக்கின் அலுவலகத்திலும், நியூஸ் கிளிக் ஆசிரியர், செய்தியாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனைகள் தொடங்கி 30 மணி நேரங்களுக்கு மேலாகியும், சோதனைகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

நியூஸ் கிளிக் நிர்வாகம் வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட நிதியை, ‘செய்தி சேனல்’ மூலம் “பண மோசடியில்” ஈடுபட்டதாக, பிற ஊடக அறிக்கைகள் மற்றும் செய்திகள் மேற்கோள் காட்டியுள்ளன.

சோதனையின் போது, ​​’நியூஸ் கிளிக்’ நிர்வாகம், அமலாக்க இயக்குநரக அதிகாரிகளுடன் ஒத்துழைத்துள்ளது, ​​’நியூஸ் கிளிக்’ அதை தொடர்ந்து செய்யும். நியூஸ் கிளிக்கில் மறைக்க எதுவும் இல்லை.

அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் மத்திய அரசாங்கம் உண்மையாக இருந்து, சட்டத்தின் போக்கைப் பின்பற்றினால், அது தவறான செயல் ஆகாது.

ஆனால், அரசாங்கத்துடன் உடன்படாத மற்றும் விமர்சிக்கும் அனைவரையும் சமாளிக்க, அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களை ஏவிவிடுவது, தற்போதைய அரசாங்கத்தின் ஒரு வழக்கமான நடைமுறையாகிவிட்டது.

கடந்த காலங்களில் வருமான வரித் துறை, அமலாக்க இயக்குநரகம் (ED), மத்திய புலனாய்வுப் பிரிவு மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு போன்ற பல்வேறு மத்திய புலனாய்வு அமைப்புகள், பத்திரிகையாளர்கள் முதல் அரசியல் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் வரை ஒரு சில குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. மேலும், அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தேசத் துரோகம், அவதூறு, நல்லிணக்கத்தை சீர்குழைத்தல், சமாதானத்தை மீறுதல் போன்ற வழக்குகளைப் பதிவு செய்து அடக்கு முறைகளுக்கு உட்படுத்தி வருகிறது.

நியூஸ் கிளிக்கில் தற்போது நடைப்பெற்று வரும் இந்த சோதனையும், அதே மாதிரியாகதான் இருப்பதாகத் தோன்றுகிறது, பழிவாங்கும் நடவடிக்கையின் மூலம், ஒரு சுயாதீனமான மற்றும் முற்போக்கான, ஜனநாயகத்தின் குரலை அடக்கி விடலாம் என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள்.

இதற்கிடையிலும், கண்ணியமான மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பப் போராடும் இந்திய மற்றும் உலக மக்களின் குரல்களை ‘நியூஸ் கிளிக்’ தொடர்ந்து வெளிப்படுத்தும் மற்றும் பதிவு செய்யும்.

இந்த சோதனைகள் போன்ற முயற்சிகள், ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கும், நீதியின்பக்கம் நிற்பவர்களை மிரட்டுவதற்கும் பயன்படுத்தினால், இது அவர்களை எந்த வகையிலும் தடுக்காது, கட்டுப்படுத்தாது.

நாடு மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து நியூஸ் கிளிக்கிற்கு ஆதரவை ஒற்றுமையாக வெளிப்படுத்தியுள்ள அனைவருக்கும் ‘நியூஸ் கிளிக்’ நன்றி செலுத்துகிறது.

இவ்வாறு ‘நியூஸ் கிளிக்’ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு, அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு உள்பட, பல்வேறு ஊடக மற்றும் அரசியல், சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பேராசிரியர் பொ.இராஜமாணிக்கம், பொதுச் செயலாளர், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு.

AIPSN-Statement-EDraidsNC-10Feb2021-LrHdsd

டெல்லியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ‘நியூஸ் கிளிக்’ மீடீயா மீது, அமுலாக்கத்துறை ரெய்ட் நடத்திக் கொண்டிருப்பது, அரசின் மீது மக்களுக்காக விமர்சனப் பூர்வமாக கருத்துக்களை முன் வைக்கும் ஊடகங்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் மக்கள் சார்ந்த வாழ்வாதாரப் பிரச்சினைகளை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து, ஆதாரங்களின் அடிப்படையில் மாற்றுக்களை மக்கள் பார்வையில் அரசுக்கும் மக்களுக்கும் தெரிவிக்கும் ஊடகமாக ‘நியூஸ்கிளிக்’ செயல்பட்டு வருகிறது. இந்த விதமான அணுகுமுறைக்காக அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கக் கூட்டமைப்பு ‘நியூஸ் கிளிக்’ கின் பின்னால் நிற்கிறது.

கோவிட் 19 காலத்தில் அரசுக்கு ஆக்கபூர்வமான கருத்துக்களை ஆதாரங்களோடு வழங்கி வந்தது. தினசரி உலக அளவிலும், இந்தியாவிலும் ஏற்படுத்திய தாக்கத்தை டேஷ் போர்டு மூலம் அனைவருக்கும் தெரிவித்து வந்தது.

இதே போன்று தற்சமயம் இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தின் போது தலைசிறந்த நிபுணர்கள் மூலம் அலசி ஆராய்ந்து தொடர்ந்து ஆதாரங்களின் அடிப்படையில் விமர்சித்து வருகிறது.

அமுலாக்கத்துறையின் நடவடிக்கைகளால் அதிர்ச்சியடைந்தாலும், தாங்கள் நிரபராதிகள் என்ற உண்மை விரைவில் வெளிவரும் என ‘நியூஸ் கிளிக்’ கூறியிருப்பது நம்பிக்கை தருகிறது.

அமுலாக்கத்துறையின் நடவடிக்கைகள், தற்போதைய அரசின் விமர்சனக் குரல்கள் மீதான அடக்குமுறையின் ஒரு பகுதியெனக் கருதுகிறது. இது போன்றே பல அரசு ஏஜென்சிகள் கைப்பாவையாகப் பயன்படுத்தப்பட்டு பழிவாங்கவும், அச்சுறுத்தல் செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவையனைத்தும் அரசுக்கு எதிராக நியாயமான கருத்துக்களைக் கூறுபவர்கள் மீது தான் திட்டமிட்டு நடத்தப்படுகிறது.

பல்கலைக் கழகங்கள் , மீடியா, சமூக அமைப்புகள், அறிவு ஜீவிகள் ஆகியோர் அரசியல் அமைப்புச்சட்டத்தில் கூறியுள்ள விமர்சன சிந்தனையும், அறிவியல் மனப்பான்மையையும் கொண்டு செயல்படும் போது, அரசு தாக்குல் நடத்துவதை விமர்சித்து அறிவியல் கூட்டமைப்பு தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. விமர்சனப் பூர்வமான சிந்தனையை வளர்க்காமல், அறிவியல் வளர்வதோ, நிலைத்து நிற்பதோ இயலாத காரியம் என உணர்ந்து இருக்கிறது.

இதற்காகவே டாக்டர் நரேந்தி தபோல்கர் என்ற பகுத்தறிவுவாதியைப் படுகொலை செய்த நாளான ஆகஸ்ட் 20-ஐ வருடந்தோறும் ‘தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்’ என அனுசரிப்பதும், அதே போன்று பகுத்தறிவாதம், விமர்சன அணுகுமுறை, அறிவியல் மனப்பான்மை ஆகியனவற்றை பிரச்சாரம் செய்த பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோரையும் தீவிரவாத இந்துத்வா கும்பல் படுகொலை செய்தயையும் கண்டித்து இயக்கம் நடத்தி வருகிறது.

எனவே தான் தற்போது நமது நாடு இக்கட்டான சூழலில் நிற்கும் நிலையில், பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை, ஜனநாயகம் கொண்டு இயங்கும் சமூகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ‘நியூஸ் கிளிக்’ ஊடகத்திற்கும், பிற ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் அறிவியல் இயக்கக் கூட்டமைப்பு உறுதுணையாக இருக்கும்.

இது போன்று அறிவியல் வளர்ச்சிக்கும், அறிவியல் மனப்பான்மை வளர்ச்சிக்கும், ஜனநாயகம் அவசியம் என்பதால், அரசு இக்குரல்களை நசுக்குவதைக் கைவிட வேண்டும் என, இக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அகில இந்தி மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேராசிரியர் பொ.இராஜமாணிக்கம், தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply