புதிய வேளாண் சட்டங்கள் பதுக்களுக்கு வழி வகுக்கும்!- பெரிய வணிகர்களை மட்டும் தான் வாழ வைக்கும்!-மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரை.

பிரதமர் நரேந்திர மோதி நேற்று சபையில் உரையாற்றியபோது, எதிர்க்கட்சிகள் வேளாண் சட்டங்களின் உள்ளடக்கம் மற்றும் நோக்கம் பற்றி பேசாமல், கிளர்ச்சியை ஏற்படுத்துவதாக பேசினார். அதற்காக இன்று, மூன்று வேளாண் சட்டங்களின் உள்ளடக்கம் மற்றும் நோக்கம் குறித்து பேசி, நான் பிரதமரை மகிழ்ச்சியடைய செய்ய நினைத்துள்ளேன். முதல் சட்டத்தின் உள்ளடக்கம் என்னவென்றால், நாட்டில் எங்கும் உணவு, தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை வரம்பற்ற முறையில் வாங்க முடியும். நாட்டில் எங்கும் கொள்முதல் வரம்பற்றதாக இருந்தால், யார் மண்டிக்கு செல்வார்கள்? எனவே முதல் சட்டத்தின் நோக்கம் மண்டிகளை மூடுவதாகும்.

இரண்டாவது சட்டத்தின் உள்ளடக்கம் என்னவென்றால், பெரிய வணிகர்கள் அவர்கள் விரும்பும் அளவுக்கு உணவு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சேமிக்க முடியும். அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பதுக்கி வைக்கலாம். எனவே, இரண்டாவது சட்டத்தின் நோக்கம் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாகும். இது, இந்தியாவில் வரம்பற்ற பதுக்கலை ஊக்கப்படுத்தும். மூன்றாவது சட்டத்தின் உள்ளடக்கம் என்னவென்றால், ஒரு விவசாயி தனது பயிர்களுக்கு சரியான விலையைக் கோருவதற்காக இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களிடம் தான் செல்ல முடியுமே தவிர, நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது.

கொரோனா தற்போது வேறு வடிவில் உருமாறி வருவது போல், ‛நாம் இருவர் நமக்கு இருவர்’ என்னும் முழக்கமும் வேறு வடிவத்தில் வருகிறது. அதாவது, இந்த தேசத்தை 4 பேர் தான் வழி நடத்தி வருகின்றனர். அந்த 4 பேர் யார் என அனைவருக்கும் தெரியும். முதல் சட்டத்தின் நோக்கம் இந்தியாவின் அனைத்து பயிர்களையும் பெறுவதற்கான உரிமையை ஒரு நண்பருக்கு வழங்குவது. இதனால் சிறு தொழிலதிபர்கள், மண்டிகளில் பணிபுரிபவர்கள் தான் நஷ்டமடைவார்கள். இரண்டாவது சட்டத்தின் நோக்கம் 2வது நண்பருக்கு உதவுவதாகும்.

இந்தியாவின் பயிர்களில் 40 சதவீதத்தை அவர் தனது சேமிப்பில் வைத்திருக்கிறார். ஆனால், இந்த சட்டங்களால் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை எனவும், விவசாயிகளுக்கு விருப்பங்களை கொடுப்பதாகவும் பிரதமர் கூறுகிறார். ஆமாம், பசி அல்லது வேலையின்மை அல்லது தற்கொலை என 3 விருப்பங்களை அவர் கொடுத்துள்ளார்.

இவ்வாறு ராகுல் காந்தி மக்களவையில் உரையாற்றினார்.

ராகுல் காந்தி பேசி கொண்டிருக்கும் போது பாஜக உறுப்பினர்கள் இடையே, இடையே குறுக்கிட்டு கோஷமிட்டனர்.

எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply