2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் கூட்டணி குறித்து நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, சென்னை, சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் வீட்டிற்கு, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோர் இரண்டு தினங்களுக்கு முன்பு சென்றனர்.
கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேசும் நிலையில் நடிகர் விஜயகாந்தின் உடல் நிலை இல்லை என்பதையும், அதே சமயம் முடிவெடுக்கும் அதிகாரம் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கையில்தான் உள்ளது என்பதையும், உணர்ந்துக் கொண்ட மேற்படி அதிமுக தூதுக்குழுவினர், மரியாதை நிமித்தமாக நடிகர் விஜயகாந்தை சந்தித்து விட்டு அங்கிருந்து திரும்பினர்.
இந்நிலையில், வேட்பாளர்கள் நேர்காணல் நடத்துவதற்கான அறிவிப்பை தேமுதிக வெளியிட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் கூட்டணியில் தேமுதிக தொடர்ந்தால், அது தங்கள் வேட்பாளர்களின் வெற்றியை பாதிக்கும் என்று விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பயப்படுகிறார்.
அதற்கு தேமுதிகவினர் சொல்லும் காரணம், பாட்டாளி மக்கள் கட்சியினர், கூட்டணி கட்சியினரின் உழைப்பையும், வாக்குகளையும் வாங்கி, தன் கட்சி வேட்பாளர்களை ஜெயிக்க வைக்கப்பாடுபடுவார்கள். ஆனால், கூட்டணி கட்சியினருக்கு மனதார வெளிப்படையாக தேர்தல் வேலை செய்யமாட்டார்கள்; வாக்களிக்கவும் மாட்டார்கள்.
குறிப்பாக, தேமுதிக வேட்பாளர்களுக்கு, பாட்டாளி மக்கள் கட்சியினர் ஓட்டுப் போடமாட்டார்கள். எனவே, பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் கூட்டணியில் தேமுதிக தொடர்வது ‘விளக்கைப் பிடித்துக்கொண்டு பாழடைந்த கிணற்றுக்குள் இறங்குவதற்கு சமம்’ என்கின்றனர்.
விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, வெளிப்படையாகவே சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை உடையவர் என்பதால், அதிமுக தலைமை தேமுதிகவை சந்தேகக் கண்ணோட்டத்தோடுதான் தொடர்ந்து பார்த்து வருகிறது. அதனால்தான் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு முன்னுரிமை அளித்து, தேமுதிக தலைமைக்கு தற்போது அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.
ஒருவேளை ‘தேமுதிக’ தனித்துப் போட்டியிட்டால், அது திமுக வெற்றிக்குதான் பாதிப்பை உண்டாகும்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com