கடந்த ஆண்டு “கொரோனா வைரஸ்” தொற்று உலகத்தையே உலுக்கத் தொடங்கிய அந்த காலக் கட்டத்தில், அதாவது 05.02.2020 அன்று, பாரத பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கு, நமது ‘உள்ளாட்சித் தகவல்’ ஆசிரியர் Dr.துரைபெஞ்சமின் அவர்கள், இந்திய தேசத்தில் இதுவரை தீர்க்கப்படாத ஒரு மிக முக்கிய பிரச்சனைக் குறித்து, 5 பக்கங்கள் கொண்ட ஒரு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அக்கடிதத்தின் உண்மை நகலையும், அக்கடிதத்தின் இந்தி மொழிப் பெயர்ப்பையும், முதன் முதலாக நமது வாசகர்களின் பார்வைக்காக, ஆசிரியரின் அனுமதியோடு இங்கு பதிவு செய்துள்ளோம்.
மேற்காணும் கடிதத்தின் இந்தி மொழிப் பெயர்ப்பு:
மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திரமோதி அவர்களுக்கு, அன்பு வணக்கம்.
இரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், குப்பைத் தொட்டிகள் மற்றும் பொது இடங்களில் சுற்றித்திரியும் மொழி தெரியாத நபர்கள், மூளை வளர்ச்சி குன்றியோர், மனநோயாளிகள், வேலைக்கு செல்ல முடியாத மற்றும் உழைக்க முடியாத மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் நோயாளிகள், குடும்ப உறுப்பினர்களாலும், உறவினர்களாலும் புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகள்…!- இது போன்ற நபர்கள் நமது தெருக்களிலும், நாம் கடந்து செல்லும் சாலைகளிலும், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் அனாதையாக சுற்றித்திரிவதையும், பிச்சையெடுத்து வருவதையும், நாம் அன்றாடம் பார்க்கும் போது உண்மையிலுமே நெஞ்சம் கனக்கிறது.
இதில் உச்சபட்ச கொடுமை என்னவென்றால், மொழி தெரியாத ஒரே காரணத்திற்காகவும், அவர்களுக்கு தெரிந்த நபர்கள் யாரும் அங்கு இல்லை என்பதாலும், இமயம் முதல் குமரிவரை இலட்சக்கணக்கான நபர்கள் வெவ்வேறு மொழி பேசும் மாநிலங்களில் மனநோயாளிகளை போல சுற்றித்திரிகிறார்கள். இதில் இளம் மற்றும் நடுத்தர வயது பெண்களும் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது உண்மையிலுமே நெஞ்சம் பதைக்கிறது.
தன்நிலை மறந்து, தன் அடையாளம் இழந்து, தான் யார் என்றே புரியாமல், உண்ண உணவு இன்றி, பருக நீரின்றி, உடுத்த உடையின்றி, படுக்க இடமுமின்றி, குப்பைத் தொட்டிகளில் உணவை தேடி, சாக்கடைகளில் நீரை பருகி, பேயாய் அலைந்து, பிணமாக தூங்கி, நாயாய் நக்கி குடித்து, கிட்டத்தட்ட நடைப்பிணங்களாகவே நாட்களை கடத்தி வரும் இவர்களைப் பற்றி என்றைக்காவது ஒரு நிமிடம் நாம் யோசித்து இருக்கின்றோமா?!
மேலும், இரயில், பேருந்து, போக்குவரத்து சிக்னல் மற்றும் பொது இடங்களில் உள்ளுர் மக்களிடமும், வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளிடமும், நம் மக்கள் உணவுக்காகவும், காசுக்காகவும் அவர்களை துரத்திக்கொண்டே கையேந்தி பின்னால் ஓடுவது எவ்வளவு பெரிய தர்ம சங்கடம் தெரியுமா?!
இதில் தர்மம் கேட்பவர்களைவிட, கொடுப்பவர்களுக்குதான் அதிக மனஉளைச்சல் உண்டாகிறது.
மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்த விலையில் உணவு உண்ண “அம்மா உணவகங்கள்”, திருக்கோயில்கள் அனைத்திலும் இலவசமாக அன்னதானங்கள் நடைபெறும் தமிழ்நாட்டில் கூட, மேற்காணும் துயரங்கள்தான் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
வறுமையை ஒழிப்பதற்கும், ஆதரவற்ற அனாதைகளை பாதுகாத்து, பராமரிப்பதற்கும் எண்ணற்றத் திட்டங்கள், அதற்கான அமைப்புகள், அரசு நிர்வாகங்கள், அதிகாரிகள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளில் அதற்கென்றே தனி அமைச்சகங்கள் இருந்தும் கூட, இந்த சமூக அவலம் கொஞ்சம்கூட மாறவில்லை என்பதை நாம் வெட்கத்தோடு ஒத்துக்கொள்ளதான் வேண்டும்.
விண்வெளியில் இராக்கெட்டை விட்டு பாராட்டைப் பெற்றான் விஞ்ஞானி!- ஆனால், நாட்டின் வறுமை கோட்டையும், சமுதாய சீர்கேட்டையும் போக்கியவன் எந்த ஞானி?!
இதற்கு உண்மையான காரணம் என்ன? யாருக்காக திட்டங்கள் தீட்டப்படுகிறதோ, எதற்காக நிதி ஒதுக்கீடு செய்யபடுகிறதோ, அவையெல்லாம் உரியவர்களுக்கு முழுமையாக சென்று சேர்வதில்லை.
ஒரு நல்ல மனிதன் ஒன்று குழந்தையை போல இருப்பான்; இல்லையென்றால், பைத்தியம் மனநிலையில் இருப்பான். அவன்தான் உண்மையான மனிதன். அப்படி இருப்பவர்கள் யாருக்கும் துரோகம் செய்யமாட்டார்கள்; யாரையும் பழித்தீர்க்கமாட்டார்கள். அவர்களிடம் கள்ளம், கபடம் அறவே இருக்காது. வெகுளியாகவும், வெள்ளந்தியாகவும் இருப்பார்கள். எதையும் எளிதில் மறந்து விடும் மனமும், மற்றவர்களை மன்னிக்கும் குணமும் அவர்களிடம் அதிகமாகவே இருக்கும். அதனால்தான் அவர்கள் மற்றவர்களால் எளிதில் ஏமாற்றப்படுகிறார்கள். அத்தகைய ஏமாற்றங்கள்தான் அவர்களுடைய வாழ்க்கையில் பெரிய தடுமாற்றத்தை உருவாக்கி, தடம் புரண்ட தொடர் வண்டியை போல, செயல் இழந்து போய்விடுகிறார்கள். அதன் பிறகு அவர்களுக்கு இந்த சமூகம் கொடுக்கும் பட்டம் என்ன தெரியுமா? பைத்தியம், லூசு, அனாதை, நாதியற்றவன்…!
நமது கண்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவும், யாசகம் கேட்டு வாழ்பவர்களாகவும் தோற்றமளிக்கும் இவர்கள் அனைவரும், எங்கிருந்து வருகிறார்கள்?! செவ்வாய் கிரகத்தில் இருந்தா வருகிறார்கள்?! இந்த அவலங்களுக்கு சமூகமோ, அரசாங்கமோ முதல் காரணம் அல்ல! தனி மனிதனின் சுயநலமும், போலித்தனமான வாழ்க்கையும்தான் இதற்கு அடிப்படை காரணம்.
நாம் ஒவ்வொருவரும் நம் பெற்றோர் மீதும், நம் உடன் பிறந்தவர்கள் மீதும், நம் உறவினர்கள் மீதும், நம் குழந்தைகள் மீதும், உண்மையான அன்பு செலுத்தி, அவர்களை அரவணைத்து, ஆதரித்து, கண்ணும், கருத்துமாக அவர்களை வழி நடத்தி பாதுகாத்து இருந்தால், இந்த உலகத்தில் “அனாதைகள்” என்ற வார்த்தையே அகராதியில் இருந்து அகற்றப்பட்டிருக்கும். அனாதை மற்றும் முதியோர் இல்லங்களுக்கும் இங்கு அவசியம் இல்லாமல் போயிருக்கும். அரசு மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் உதவிக்காக கையேந்தி நிற்க வேண்டிய அவலமும் அடியோடு ஒழிந்திருக்கும்.
உலகத்தில் உண்மையிலுமே மிகப் பெரிய துயரம் என்ன தெரியுமா? ஒரு மனிதன், ஒரு சக மனிதனிடம் உணவுக்காகவும், உடைக்காகவும், உயிர் வாழ்வதற்காகவும் கூனி, குருகி, கையேந்தி யாசகம் (பிச்சை) கேட்பதுதான். இதை நாம் ஒவ்வொருவரும் தேச அவமானமாகவும், தேசிய குற்றமாகவும் கருத வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சமூக அவலங்களை நாம் முழுமையாக தடுக்க முடியும்.
இந்தியா சுதந்திரமடைந்து 72 ஆண்டுகளுக்கு மேலாகியும், மேற்கண்ட சமூக அவலங்களுக்கு இதுவரை யாரும் நிரந்தரத் தீர்வு காணவில்லை என்பதை நினைக்கும்போது உண்மையிலுமே நெஞ்சம் பதைக்கிறது.
எனவே, இதற்கு பாரத பிரதமராகிய தாங்கள்தான் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்திய மக்களவையிலும், மாநிலங்களவையிலும் யானை பலத்தோடு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தாங்கள், உங்கள் தலைமையிலான ஆட்சியில்கூட இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என்றால், வேறு எப்போதுதான் கிடைக்கும்?!
இதில் பிழைப்பு நடத்துவதற்காக பிச்சை எடுப்பதை முழுநேரத் தொழிலாகக் கருதி செயல்படும் சில போலி நபர்களும், ஒரு சில சமூக விரோதிகளும், முன்னாள், இன்னாள் கிரிமினல் குற்றவாளிகளும், தேசத்திற்கு அச்சுறுத்தலான ஒரு சில உளவாளிகளும் இதுபோன்று மாறுவேடத்தில் சுற்றித்திரிகிறார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை. இதுபோன்ற நபர்களை இனங்கண்டு சட்டப்படி தண்டிக்கவேண்டும்.
மற்றவர்களை போர்கால அடிப்படையில் மீட்டு இறுதிகாலம் வரை அரசே அவர்களை பாதுகாத்து, பராமரிக்க வேண்டும்.
ஏழைகளே இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கு முன்பு, பிச்சைக்காரர்கள் நடமாட்டம் இல்லாத இந்தியாவை நாம் முதலில் உருவாக்க வேண்டும். இது அவசியமட்டுமல்ல! அவசரமும் கூட. அப்போதுதான் இந்தியா உண்மையிலுமே தூய்மை இந்தியாவாக மாறும்.
கடந்த 72 ஆண்டுகளில் தீர்க்க முடியாத இத்தேசிய பிரச்சனையை, நாம் மனது வைத்தால் 3 ஆண்டுகளில் முழுமையாக தீர்க்கமுடியும். இதற்கு நிதி முக்கியமல்ல! அரசியல் குறிக்கீடு இல்லாத ஒரு சுதந்திரமான தன்னாட்சி அமைப்பும், தியாக மனப்பான்மையோடு செயல்படும் நிர்வாக குழுக்களும் இருந்தாலேபோதும்.
இதில் தங்களுக்கு ஆர்வமும், விருப்பமும், முழுமையான அர்பணிப்பும் இருந்தால், இதுகுறித்து தங்களோடு நேரில் விரிவாக விவாதிக்கவும், கலந்து ஆலோசிக்கவும் மற்றும் கருத்து பரிமாற்றம் செய்யவும் நான் தயாராகவே இருக்கிறேன். தங்களின் மேலான பதிலுக்காக காத்திருக்கிறேன்.
முக்கிய குறிப்பு: தங்களை நான் நேரில் சந்திக்க நேர்ந்தால், என் தாய்மொழி தமிழில் நான் தங்களிடம் தெரிவிப்பதை, தங்கள் தாய்மொழியான குஜராத்தியில் மொழியாக்கம் செய்து தங்களுக்கு தெரிவிப்பதற்கு, தமிழ் மற்றும் குஜராத்தி மொழிகளில் புலமைப்பெற்ற ஒரு நபரை அவசியம் தாங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஏனென்றால், ஒரு உணர்வுப்பூர்வமான உரையாடல் மற்றும் தகவல்களை (சங்கதிகளை) ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்துகொள்ளும்போது, அவரவர் தாய்மொழியில் அது உணரப்பட்டால்தான் அவற்றின் வலியும், வலிமையும் மற்றும் அவற்றின் மகத்துவமும் நன்கு புரியும். இது நமது தேசதந்தை மகாத்மா காந்தி நமக்கு விட்டு சென்ற அனுபவ பாடம். அதேயே நாமும் தொடர்ந்து பின்பற்றுவோம்.
LR-TO-HONBLE-Prime-Minister-Shri-Narendra-Modi.-Feb-05-2020.-1
-தொகுப்பு: கே.பி.சுகுமார்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
மிக சரியாக சொன்னீர்கள் சார், உங்களுக்கு ஒரு மிக பெரிய சலியூட் சார்.