அதிகரித்து வரும் கொரோனாத் தொற்று…!-தமிழகம் உள்பட 5 மாநில சட்டபேரவைத் தேர்தல்களை சுமார் 3 மாதங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒத்திவைக்க வேண்டும்.

MHFW

தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனா (COVID-19) தொற்றின் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகளில் 85.91 சதவீதம் இந்த மாநிலங்களில் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 22,854 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 13,659 நபர்களும் (அன்றாட புதிய பாதிப்புகளில் சுமார் 60%), கேரளாவில் 2,475 பேரும், பஞ்சாபில் 1,393 பேரும், புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் 671 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,89,226 ஆகப் பதிவாகியுள்ளது. இது நாட்டின் ஒட்டு மொத்த பாதிப்பில் 1.68 சதவீதமாகும்.

இன்று காலை 7 மணி வரை, நாடு முழுவதும் 4,78,168 முகாம்களில்‌ 2.56 கோடி (2,56,85,011) பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 71,97,100 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 40,13,249 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 70,54,659 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்), 6,37,281 முன்கள ஊழியர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), இதர உடல் உபாதைகள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 9,67,058 பேருக்கும் (முதல் டோஸ்), 60 வயதைக் கடந்த 58,15,664 பயனாளிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா (COVID-19) தொற்றால் 126 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதை நான் மட்டும் இங்கு தன்னிச்சையாக சொல்லவில்லை; இரண்டு தினங்களுக்கு முன்பு அதாவது மார்ச் 11 -ந்தேதி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், மேற்காணும் புள்ளி விபரங்களை வெளியிட்டு நாட்டு மக்களை விழிப்பாக இருக்கும்படி எச்சரித்து தனது கவலையைப் பதிவு செய்துள்ளது.

இந்த இக்கட்டான பேரிடர் காலக்கட்டத்தில்தான் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளின் ஆயுட் காலம் விரைவில் நிறைவடைய இருக்கிறது. அதனால்தான் மேற்படி 5 மாநிலங்களின் தேர்தலை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்டு, அதற்கான நடத்தை விதிமுறைகளையும் அறிவித்துள்ளது.

அதன்படி வேட்புமனு தாக்கலின் போது 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்; வீடு வீடாக சென்று அரசியல் கட்சியினர் 5 பேர் மட்டுமே வாக்கு சேகரிக்க வேண்டும்; வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ள வேண்டும்; அரசியல் கட்சிகள் நடத்தும் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டங்களில் ‘கொரோனா-(COVID-19)‘ பரவல் தடுப்பு நடவடிக்கைகளை, அதாவது அனைவரும் முககவசம் அணிய வேண்டும்; சமூக இடவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று, இந்திய தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

அது சரி “சர்க்கரை” என்று காகிதத்தில் எழுதி நக்கினால் இனிக்குமா என்ன?! -அதுபோலதான் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவும்.

ம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த விதிமுறைகளையும், உத்தரவுகளையும், ஆளும் கட்சி, எதிர்கட்சி, இதரக் கட்சிகள் உள்பட, எந்த அரசியல் கட்சிகளும் இதுவரை பின்பற்றவும் இல்லை; இனி பின்பற்ற போவதாகவும் தெரியவில்லை. அவ்வளவு ஏன்? புழு- பூச்சிக்கு கொடுக்கும் மரியாதையைக் கூட, இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு அரசியல் கட்சி நிர்வாகிகள் கொடுப்பதில்லை என்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் உருமாறி காட்டுத் தீ போல பரவி வரும் ‘கொரோனா-(COVID-19) மறு பரவலை, இந்திய தேர்தல் ஆணையம் எப்படி தடுக்க முடியும்?! (அல்லது) எப்படி தடுக்கப் போகிறது?!

தேர்தல் நடத்துவது எவ்வளவு முக்கியமோ; அதைவிட பன்மடங்கு மிக முக்கியமானது பொது மக்களின் உயிர் என்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புயல், மழை, வெள்ளப் பெருக்கு, பூகம்பம், நிலச்சரிவு மற்றும் தொற்று நோய் பரவல்… இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்தபோது, பொதுத் தேர்தல்களையும், பல இடைத் தேர்தல்களையும் தற்காலிகமாக மறுத்தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்த முன் உதாரணங்கள், நம் நாட்டில் ஏற்கனவே பல முறை நடைப்பெற்று இருக்கிறது.

அவ்வளவு ஏன்? கேவலம், அளவுக்கு அதிகமான பணம், பரிசுப்பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது என்ற காரணத்திற்காக, பல தொகுதிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கான முழு அதிகாரம் இந்திய தேர்தல் ஆணையர்களுக்கு இருக்கிறது.

எனவே, இந்திய தேர்தல் ஆணையம் ‘கொரோனா-(COVID-19)’ பேரிடரை கருத்தில் கொண்டு, நாட்டு மக்களின் நலன் கருதி தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல்களை சுமார் 3 மாதக் காலத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட வேண்டும்.

இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது?! என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.

Dr.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply