சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்!- அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளரின் வெற்றிக்கு ஆபத்து! -சேந்தமங்கலம் தொகுதி கள நிலவரம்.

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ C.சந்திரசேகரன்.

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ C.சந்திரசேகரனுக்கு, அதிமுக தலைமை இந்த முறை போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்பதற்காக, சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக C.சந்திரசேகரன் களமிறங்கி, தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரச்சாரப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து அவர் இன்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இதுக்குறித்து சுயேட்சையாகப் போட்டியிடும் சேந்தமங்கலம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் C.சந்திரசேகரனிடம் பேசினோம்:

இந்த முறை அதிமுகவில் தனக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு அமைச்சர் தங்கமணிதான் காரணம்; தொகுதி மக்களுக்கும், கடைநிலையில் உள்ள அதிமுக கட்சித் தொண்டர்களுக்கும் நான் சிறப்பாக சேவைசெய்துள்ளேன். அவர்களின் ஆதரவால்தான் நான் சுயேட்சையாக போட்டியிடுகிறேன் என்றார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் C.சந்திரசேகரன் அதிமுக சார்பில் போட்டியிட்டு 91,339 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.பொன்னுசாமி 79,006 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

கடந்த 2006 -ம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பொன்னுசாமி, கடந்த 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த நிலையிலும், அதே பொன்னுசாமிக்கு தற்போது திமுகவில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட சாந்தி ராஜமாணிக்கம் 76,637 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அப்போது இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.பொன்னுசாமி 68,132 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார் என்பது இங்கு குறித்தக்கது.

எனவே, தற்போது சுயேட்சையாக களமிறங்கி இருக்கும் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் C.சந்திரசேகரனை அதிமுக தலைமை சமாதானப்படுத்தவில்லை என்றால்; அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் எஸ்.சந்திரனின் வெற்றிக்கு பாதிப்பை உண்டாக்கும்.

Dr.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply