144 தடை உத்தரவை கண்டித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள்!- மக்களுக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்த புதுச்சேரி மாவட்ட ஆட்சித் தலைவர்!

Purva Garg, I.A.S., District Collector -cum- District Magistrate. Puducherry.

புதுச்சேரியில் தேர்தலை முன்னிட்டு 144 தடை உத்தரவு ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 7 மணி முதல் 7ஆம் தேதி காலை 7 மணி வரை அமல்படுத்தப்படும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் மார்ச் 22ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

2021032435

இந்த 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அதனை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.என்.சுமதி, “எந்த காரணங்களையும் குறிப்பிடாமல் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பூர்வாகார்க் பிறப்பித்துள்ளார். மத்தியில் ஆளும்கட்சியாக இருக்கக்கூடிய பாஜக ட்விட்டர் பதிவுகளை, மாவட்ட ஆட்சியர் பலமுறை ரீட்வீட் செய்துள்ளார். பாஜகவுக்கு ஆதரவாக செயல்படக்கூடியவராக இருப்பதால் இந்த உத்தரவு அரசியல் உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.” என்றார்.

அப்போது புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாலா, ”தேர்தலை முன்னிட்டு 144 தடை பிறப்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உண்டு.” என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “அதிகாரம் இருக்கிறது என்பதற்காக நாங்கள் அனைத்து வழக்குகளிலும் மரண தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறோமா? என கேள்வி எழுப்பினர். விஷயத்தின் தன்மையை ஆராய்ந்து உரிய முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், ஒவ்வொரு தேர்தலின் போதும் இதுபோன்ற உத்தரவு பிறப்பிப்பது வழக்கம் என்றார். ஆனால் புதுச்சேரி அரசின் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அனுமதித்த தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், நீங்கள் தேர்தல் ஆணையம் தானே தவிர, அரசியல் கட்சி கிடையாது என்றும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை உணர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். 144 தடை உத்தரவு ஏன் பிறப்பிக்கப்பட்டது என்பதை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் உரிய முறையில் மக்களுக்கு தெளிவுபடுத்தாவிட்டால், நீதிமன்றமே அதை ரத்து செய்யும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

அப்போது புதுச்சேரி அரசு தரப்பில் 144 தடை உத்தரவு எதற்காக அமல்படுத்தப்பட்டது என்ற விளக்கத்தை வெளியிடுவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி.

Order-of-Honble-Madras-High-Court-

2021040461

இந்நிலையில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும் மற்றும் தேர்தல் அதிகாரியுமான பூர்வா கார்க் எழுத்துப்பூர்வமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் “புதுச்சேரியில் 144 தடை உத்தரவு வாக்குப்பதிவை பாதிக்காது. குடும்பமாகவோ, நண்பர்களுடன் சேர்ந்து சென்று வாக்களிக்கவோ தடை இல்லை. சட்டவிரோதமாக கூட்டம் கூடுவதை தடுக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு கேட்பதற்கு தடை விதிக்காது. பொது ஊரடங்கு, மத விழாக்கள், திருமணங்கள், இறுதி சடங்குகள் அல்லது பிற தேர்தல் தொடர்புடைய செயல்களுக்கோ இது பொருந்திடாது. மக்கள் அதிகளவில் வந்து தங்களுடைய வாக்குகளை செலுத்த வேண்டும்என அவர் கேட்டு கொண்டுள்ளார்.

இதனால் இந்த வழக்கு இத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply