உடல்நலனும் உள்ளநலனும்தான் உண்மையான செல்வங்கள்!-அடையாறு @ தொல்காப்பியப் பூங்காவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழின் மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம். இதற்கு உரை எழுதியவர்கள் பலர் என்றாலும், இன்றைய காலத்தில் பலரும் புரிந்துகொள்ளும்படி மிகவும் எளிய வகையில், ‘தேன்சுவை’ போன்ற கருத்துகளைத் தந்தவர் கலைஞர் மு.கருணாநிதி மட்டுமே. இலக்கண வகையில்… மரபு வழியில் மலைக்குன்றுபோல் இருந்த தொல்காப்பியத்தை, தன் எழுத்து உளியால் உடைத்து… அதில், கருத்தாழமிக்கக் குறிப்புகளைப் பயிரிட்டு… பூங்காவாக மாற்றியவர் கலைஞர் மு.கருணாநிதி.

அரசியலில் கலைஞர் மு.கருணாநிதியின் நடவடிக்கைகள் மற்றும் அவரது செயல்பாடுகள் குறித்து ஆயிரம் பேர்; ஆயிரம் குற்றம், குறைகளை சொன்னாலும்; அவர் மீது அடுக்கடுக்கான பல விமர்சனங்களை முன்வைத்தாலும்; ஆனால், அவரது எழுத்துப் பணிகளும், அவரது இலக்கியப் பணிகளும், அவர் எழுதிய படைப்புகளும், காவியங்களும்….சாகா வரம் பெற்றவை என்பதை, அவரது எதிரிகள்கூட ஏற்றுக்கொள்வார்கள்.

அப்படி அவர் எழுதிய நூல்களில் ஒன்றுதான் “தொல்காப்பியப் பூங்கா”. அந்த நூலில் மெய் எழுத்துக்கள் எத்தனை என்று எவ்வாறு நினைவில் வைத்துக்கொள்ளுவது என்பதற்கு, கலைஞர் மு.கருணாநிதி சொன்ன வரலாற்று விளக்கம்; அதை இன்று நினைத்தாலும் மெய்சிலிர்கிறது.

ஆம், பள்ளியில் படிக்கும் பூங்கோடி என்ற பெண் வகுப்பில் கேள்விக் கேட்ட ஆசிரியரிடம் இவ்வாறு கூறுகிறாள்;

சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலையெடுத்திடக் கல் கொண்டு வர குயிலாலுவம் என்ற இடத்தில் கனகவியாசர் என்ற மன்னருடன் போரிட்டு வென்றான். அவர்கள் தலையில் கல்லேற்றச் செய்தான்.

அப்போது சேரன் செங்குட்டுவன் இவ்வாறு முழக்கமிட்டான்:

“தேவாசுரப்போர் பதினெட்டு ஆண்டுகள் நடந்தது! இராமாயணப்போர் பதினெட்டு மாதங்கள் நடந்தது. பாரதப்போர் பதினெட்டு நாட்கள் நடந்தது! இமயம் வந்து இந்தச் செங்குட்டுவன் நடத்திய போர் பதினெட்டு நாழிகையில் முடிந்து விட்டது என்று” அந்த வீர உரையை நான் நினைவில் எப்போதும் வைத்திருப்பதால், அந்த உணர்வோடு மெய் எழுத்துக்கள் பதினெட்டு என்பதை நீங்கள் கேட்டவுடன் சொல்லி விடுவேன் என்றாள் அந்த பெண்!- என்று கலைஞர் மு.கருணாநிதி அதில் குறிப்பிட்டு இருப்பார்.

அப்பேற்பட்ட பழந்தமிழ் நூல் இயற்றிய தமிழ்ப் புலவர் தொல்காப்பியரின் பெயர் சூட்டப்பட்ட அடையாறு @ தொல்காப்பியப் பூங்காவிற்கு, இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

நாம் ஒவ்வொருவரும் நமது பணியில் செலுத்தும் கவனத்தில் சிறு அளவேனும், நம் உடல்நலத்தைப் பேணுவதிலும் செலுத்தவேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட முடியும்; உடல்நலனும் உள்ளநலனும்தான் உண்மையான செல்வங்கள்..!-என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று குறிப்பிட்டுள்ளார்.

அதையேதான் நானும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன், ”வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம்; பெற்றவர்கள் பட்டக்கடன் பிள்ளைகளைச் சேரும்” ஆம், 358 ஏக்கர் பரப்பளவுக் கொண்ட அடையாறு @ தொல்காப்பியப் பூங்கா; கலைஞர் மு.கருணாநிதி அடிக்கல் நாட்டியதால் என்னமோ; பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இன்றி பரிதாபமாக இருக்கிறது. இதை புனரமைத்து சிறப்பாக பராமரிக்க தமிழக அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply