அலட்சியம் வேண்டாம்; எச்சரிக்கையாக இருப்போம்; மூன்றாம் அலையைத் தடுப்போம்!-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கொரோனா” விழிப்புணர்வு பிரசாரம்.

முக கவசம் அணியாமல் செல்வது, கூட்டமாக கூடுவது, நெரிசலாக நிற்பதை எல்லாம் பார்க்கும் போது, மக்கள் விழிப்புணர்வு பெறாமல் இருப்பது, எனக்கு வேதனை தருகிறது.அதனால் தான், சில குறிப்பிட்ட இடங்களில் கூட்டம் சேருவது கண்டறியப்பட்டால், அந்த பகுதியை மூடும் நடவடிக்கையை எடுக்கலாம் என, மாவட்ட ஆட்சித் தலைவர்களை அறிவுறுத்தி உள்ளேன். சென்னையில், சில பகுதிகள் அப்படி தான் மூடப்பட்டுள்ளன.

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே, கடைகளை திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. அதை உணராமல், விதிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் நடந்து கொள்ளக்கூடாது. கூட்டமாக கூடுவதன் வாயிலாக, கொரோனா பரவலுக்கு மக்களே காரணமாகி விடக்கூடாது என்று மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறேன். மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்திக்காதீர்கள் என்று, கொஞ்சம் கடுமையாகவே சொல்லிக் கொள்கிறேன்.

மூன்றாவது அலை மட்டுமல்ல, எந்த அலை வந்தாலும், அதை எதிர்கொள்ளும் வல்லமை தமிழக அரசிடம் உள்ளது. அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதி தயாராக உள்ளது. அதற்காக, கொரோனாவை விலை கொடுத்து மக்கள் வாங்கி விடக்கூடாது.

முதல் அலையை விட மாறுபட்டதாக இரண்டாவது அலை இருந்தது. இரண்டாவது அலையை விட மாறுபட்டதாக மூன்றாவது அலை இருக்கலாம். நோய் இப்படித்தான் பரவும்; இந்த மாதிரி விளைவையே ஏற்படுத்தும் என்று உறுதியாக சொல்ல முடியாததாக கொரோனா இருக்கிறது. மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள, தடுப்பூசியே தலைசிறந்த ஆயுதம் என்பது உலகம் ஒப்புக்கொண்ட உண்மை.

எனவே, அலட்சியம் வேண்டாம்; எச்சரிக்கையாக இருப்போம்; மூன்றாம் அலையைத் தடுப்போம்.

இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

-எஸ்.திவ்யா.

Leave a Reply