சமூக நீதி போராளி; சுதந்திரத்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 64-வது நினைவு தினம்!-அந்த நாள் ஞாபகம்; நெஞ்சிலே வந்ததே..!

இம்மானுவேல் சேகரனார் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக மட்டும் அவர் போராட வில்லை; இந்திய சுதந்திரத்திற்காக “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற தியாகி என்பது; பெரும்பாலும் இன்றை தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பில்லை…!

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகில் உள்ள செல்லூரில் 1924 அக்டோபர் 09 ஆம் நாள் வேதநாயகம், ஞானசுந்தரி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாக இம்மானுவேல் சேகரன் பிறந்தார். இவரது தந்தை வேதநாயகம் அக்காலத்தில் ஆசிரியராகவும், வழக்கறிஞராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது ஆரம்பக் கல்வியைத் தனது தந்தையாரிடம் செல்லூரிலேயே கற்றார். அதன் பிறகு பரமக்குடியில் சி. எஸ். எம். பள்ளியில் விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் படித்தார்.

இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுக்க துவங்கிய இம்மானுவேல் சேகரன்; அவரது 18-ஆவது வயதில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் அவர் துணிச்சலுடன் கலந்து கொண்டார். அதனால் அவருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை கிடைத்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக கொதித்தெழுந்த இம்மானுவேல் சேகரன், தமது 19-ஆவது வயதில் தீண்டாமையின் அடையாளமாக இருந்து வந்த “இரட்டை குவளை (டம்ளர்)” முறைக்கு எதிரான மாநாட்டையும் அவர் நடத்தினார்.

இம்மானுவேல் சேகரன் ஆதிக்க சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டு 64 ஆண்டுகள் ஆகியும்கூட, தமிழ்நாடு உள்பட, இந்தியாவில் இதுவரை தீண்டாமை ஒழிந்தபாடில்லை. தமிழ்நாடு உள்பட, இந்தியாவில் பல பகுதிகளில் இரட்டை குவளை (டம்ளர்) முறை இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. இதை தேச அவமானமாகவும்; தேசிய குற்றமாகவும் கருத வேண்டும்.

தீண்டாமை ஒரு பாவச் செயல்!
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்!
தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல்!-என பாடப்புத்தகங்களில் மட்டும்தான் அச்சடிக்கப்பட்டுள்ளதே தவிர, நடைமுறையில் எங்கும் இல்லை என்பதை நினக்கும் போது; உண்மையிலுமே நெஞ்சம் பதைக்கிறது.

இம்மானுவேல் சேகரன் 1943 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தில் அவில்தாராக சேர்ந்தார். இதன் மூலம் அவர் பல மொழிகளைத் தெரிந்தவராக விளங்கினார். ஆங்கிலம், இந்தி, உருசிய மொழி உட்பட ஏழு மொழிகளில் அவர் தேர்ச்சி பெற்றவராக திகழ்ந்தார்.

இந்நிலையில், 1950-ல் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை கண்டு வெகுண்டெழுந்தார். இராணுவத்திலிருந்து விடுப்பில் வந்தவர், தமது இன மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான எழுச்சியை ஒருமுகப்படுத்துவதற்காக, இராணுவத்தில் இருந்து விலகினார். “ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்” என்ற அமைப்பை அவர் தொடங்கினார்.

இதற்கிடையில், 1946 மே 17 ஆம் நாள் இதம்பாடல் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் கிரேஸ் என்ற ஆசிரியை, இம்மானுவேல் சேகரன் திருமணம் செய்து கொண்டார்.

இம்மானுவேல் சேகரன் – அமிர்தம் கிரேஸ் தம்பதிக்கு, மேரி வசந்த ராணி, பாப்பின் விஜய ராணி, சூரிய சுந்தரி பிரபா ராணி, மாணிக்கவள்ளி ஜான்சி ராணி என்ற நான்கு பெண் குழந்தைகள் பிறந்தனர்.

இம்மானுவேல் சேகரனின் துடிப்பான சமூக சீர்திருத்தப் பணிகளை கண்டு வியந்த பெருந்தலைவர் கு.காமராஜர், இவரைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைய அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று இம்மானுவேல் சேகரன் காங்கிரசில் இணைந்தார்.

இந்நிலையில், செல்லூரிலிருந்து வெங்கட்டான் குறிச்சிக்கு இம்மானுவேல் சேகரன் குடிபெயர்ந்த போது; ஆதிக்க சாதி வெறியர்கள் இவரை கொலை செய்வதற்கு எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

1957-ம் ஆண்டு முதுகுளத்தூர் தொகுதி இடைத்தேர்தலுக்குப் பின்னர், அந்தத் தொகுதியில் சாதிக் கலவரம் ஏற்படக் கூடிய ஒரு சூழல் உருவானது. காங்கிரஸ்-பார்வர்டு பிளாக் கட்சிகளிடையேயான அரசியல் மோதல் சாதிக் கலவரமாக மாறும் சூழல் ஏற்பட்டது. அதுபோன்ற கலவரம் ஏற்பட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு அமைதிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த அமைதிக்கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் மக்களின் சார்பில் கலந்து கொண்ட ஆறு பேரில் இம்மானுவேல் சேகரனார் ஒருவர். அந்தக் கூட்டத்தில் பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சசிவர்ணத் தேவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் பிரிதிநிதித்துவம் குறித்து இம்மானுவேல் சேகரனுக்கும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமைதிக்காக கூட்டப்பட்ட அந்த கூட்டம்; வாக்குவாதத்திலும், பதட்டத்திலும் முடிந்தது.

ந்த கூட்டம் நடந்த மறுநாள், அதாவது 1957-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி 33 -வது வயதில் இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதிகளில் வன்முறை வெடித்தது; சாதிக் கலவரம் ஏற்பட்டது.

இம்மானுவேல் சேகரன் படுகொலை வழக்கில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பின்னர் அந்தக் குற்றசாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இம்மானுவேல் சேகரன் நினைவிடம் பரமக்குடி கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் உள்ளது. ஆண்டுதோறும் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பல மாவட்டங்களில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக லட்சக்கணக்கான மக்கள் குருபபூஜை நாளில் வருகை தருகின்றனர். பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்தும், ஆண்கள் காவடி எடுப்பதும், சிலம்பாட்டம் ஆடுவதும், வருகின்ற மக்களுக்கு அன்னதானம், தண்ணீர் பந்தல், புத்தக கடை விற்பனை, தியாகி இமானுவேல் சேகரன் படம் அச்சடித்த பனியன் விற்பனை என்று, கோவில் திருவிழாவை போல தியாகி இம்மானுவேல் நினைவு நாளை மக்கள் கடைபிடிக்கின்றனர்.

ஆம், இன்று இம்மானுவேல் சேகரனாரின் 64-வது நினைவு தினம்!-அவரை ஒரு சாதி தலைவராக மட்டும் கருதி ஒதுக்காமல்; ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும்; நாட்டின் சுதந்திரத்திற்காகவும் போராடிய அவரின் தியாகத்தைப் போற்றுவோம்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply