நாட்டு மாடுகளை அழியாமல் காத்து வரும் மனிதர்கள்..!

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், வேம்பனுர் கிராமம், வண்ணாரப்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளகண்ணு. இவரின் முன்னோர்கள் காலத்தில் இருந்து கடந்த 7 தலைமுறைகளாக நாட்டு மாடுகளை வளர்த்து பராமரித்து வருகின்றனர். அந்த வகையில் வெள்ளகண்ணு தனது நினைவு தெரிந்த காலம் முதல் தொடர்ந்து நாட்டு மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

புயல், மழை வெள்ளம், வறட்சி மற்றும் இயற்கை பேரிடர்கள் எது நடந்தாலும், அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் மேய்ச்சல் நிலம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி செல்வதுதான் அவரின் வாழ்நாள் கடமையாக தொடர்ந்து செய்து வருகிறார்.

நெருங்கிய உறவினர்கள் குடும்பத்தில் நடைபெறும் கல்யாணம், காதுகுத்து போன்ற விசேஷங்களுக்கு மட்டுமல்ல; துக்க நிகழ்ச்சிகளுக்கு கூட மாடுகளை வெளியூர்களில் தனியாக விட்டுவிட்டு செல்ல முடியாது. இந்த மாடுள் மட்டும்தான், இவர்களின் உலகமாக இன்று வரை இருந்து வருகிறது.

வெள்ளகண்ணு.

வெள்ளகண்ணுக்கு தற்போது 60 வயதாகிறது. கடந்த சில வருடங்களாக அவருக்கு அடிக்கடி உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. முன்பு போல் வெளியூர்களுக்கு சென்று மாடுகளை மேய்பதற்கு அவருக்கு ஆர்வம் இருந்தாலும், ஆனால், அவரது உடல் ஒத்துழைக்க மறுக்கிறது.

இந்நிலையில், தன் வசமுள்ள 60-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை அவரது மகனும், அவரது தம்பி மகன்களும் தற்போது மேய்த்து வருகின்றனர்.

நாடோடியாக வெளியூர்களுக்கு சென்று மேய்ச்சல் நிலங்களில் மாடுகளை பட்டி போடுவதன் மூலம் கிடைக்கும் சொர்ப்ப வருமானத்தைக் கொண்டு வெள்ளகண்ணு வகையறாக்கள் ஏதோ வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், வெள்ளகண்ணுக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில், சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இதனால், மருத்துவ சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் அவ்வப்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏழு தலைமுறைகளாக நாட்டு மாடுகளை அழியாமல் பாதுகாத்து, பராமரித்து வரும் வெள்ளகண்ணு வகையறாக்கள் தற்போது வறுமையில் வாடி வருகின்றனர். எனவே, மத்திய, மாநில அரசுகள் அவர்களின் குடும்பத்திற்கும், வெள்ளகண்ணு மருத்துவ சிகிச்சைக்கும் கருணை அடிபடையில் உதவ வேண்டும் என்பது தான்; இந்த செய்தித் தொகுப்பின் உண்மையான நோக்கம்.

செய்வார்களா?!- பொறுத்திருந்துப் பார்ப்போம்!

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply